லஞ்ச ஒழிப்பு அதிகாரியை தள்ளி விட்ட விவகாரம்: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் மீது பாய்ந்தது வழக்கு

லஞ்ச ஒழிப்பு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்து, தள்ளி விட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-09-18 10:24 GMT


புதுடெல்லி,


டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அமனத்துல்லா கான். இவர் 2016-ல் ஆண்டு டெல்லி வக்பு வாரிய தலைவராக இருந்த காலத்தில், விதிகளை மீறி வக்பு வாரியத்திற்கு நிர்வாகிகளை நியமித்தது, பணமோசடியில் ஈடுபட்டதாக அமனத்துல்லா கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக டெல்லி ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், எம்.எல்.ஏ. அமனத்துல்லா கான் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளியின் வீட்டில் டெல்லி ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் போது 24 லட்ச ரூபாய், உரிமம் இல்லாத 2 கைத்துப்பாக்கிகளை கைப்பற்றினர். இதனை தொடர்ந்து வக்பு வாரிய முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமனத்துல்லா கானை டெல்லி போலீசார் நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்தனர்.

அவரது நண்பர் ஹமித் அலியை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் ஜமியா நகரில், எம்.எல்.ஏ. அமனத்துல்லா கான் வீட்டுக்கு சோதனைக்காக சென்ற லஞ்ச ஒழிப்பு அதிகாரி ஒருவரை பணி செய்ய விடாமல் கானின் ஆதரவாளர்கள் தடுத்ததுடன், அவரை கையால் தள்ளி விட்டு உள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்தது.

இதுபற்றிய வீடியோவும் வெளிவந்தது. அதில், அதிகாரி ஒருவரை கானின் ஆதரவாளர்கள் கையால் தள்ளி விடும் காட்சிகள் வெளியிடப்பட்டன. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு பணியில் உள்ளபோது ஊழியர் ஒருவரை, பணி செய்ய விடாமல் தடுத்ததற்காக இந்த வழக்கு பதிவாகி உள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்