நேருவின் பாதையில் காங்கிரஸ் கட்சி எப்போதும் செல்லும் - மல்லிகார்ஜுன கார்கே

முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு நாளான இன்று அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

Update: 2024-05-27 04:37 GMT

புதுடெல்லி,

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமரும், காங்கிரஸ் தலைவருமான ஜவஹர்லால் நேருவின் 60-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 1889 ம் ஆண்டு நவம்பர் 14 ம் தேதி பிறந்த ஜவஹர்லால் நேரு, இந்திய சுதந்திர போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். மகாத்மா காந்தியுடன் சேர்ந்து இந்திய சுதந்திரத்துக்காக தீவிரமாக போராடினார்.

நாடு சுதந்திரம் அடைந்தவுடன் முதல் இந்திய பிரதமராக பதவியேற்று, நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்டார் நேரு. சுதந்திரம் அடைந்தவுடன் நிலவிய பொருளாதார சிக்கல்கள், நிர்வாக குறைபாடுகள், உள்கட்டமைப்புகள் போன்றவற்றை சரிசெய்தார். பக்க வாதம் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்ட ஜவஹர்லால் நேரு 1964ம் ஆண்டு மே 27 ஆம் தேதி காலமானார்.

இந்தநிலையில், ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளான இன்று, டெல்லியில் உள்ள அவரது நினைவிடமான சாந்தி வனத்தில் காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, மாநிலங்களவை உறுப்பினர் அஜய் மேகென் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கார்கே நேருவை 'இந்தியாவின் அணிகலன்' என்று குறிப்பிட்டு நாட்டின் வளர்ச்சியில் அவருடைய எண்ணற்ற பங்களிப்பு குறித்தும் பகிர்ந்துள்ளார்.

மேலும், "நவீன இந்தியாவின் முக்கியச் சிற்பியாக நேரு விளங்கினார். அறிவியல், பொருளாதாரம், தொழில்துறை, போன்றவற்றின் மூலம் நாட்டை அவரது முயற்சியால் முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு சென்றார். நேர்மையான ஜனநாயகத்தின் பாதுகாவலனாக விளங்கினார்.

நாட்டின் பாதுகாப்பு, முன்னேற்றம், ஒற்றுமை, அனைவருக்கும் சமவாய்ப்பு போன்றவையே நமது கடமையாக இருக்க வேண்டும். மதம், இனம், மொழி என்ற அடிப்படையில் இல்லாமல் அனைத்து குடிமக்களுக்கும் சமமாக வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதை நேரு அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளார்.

நாட்டில் குறிப்பிட்ட சிலர் மட்டும் பணக்காரர்களாகவும், பெரும்பாலான மக்கள் ஏழையாகவும் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை. நேரு முன்வைத்த சட்டத்தின் நேர்மையான பாதையில் காங்கிரஸ் கட்சி எப்போதும் செல்லும் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்