சிக்கிமில் நிலச்சரிவால் தவித்த 500 சுற்றுலா பயணிகளை மீட்ட ராணுவத்தினர்

சிக்கிமில் நிலச்சரிவால் தவித்த சுமார் 500 சுற்றுலா பயணிகளை ராணுவத்தினர் மீட்டனர்.

Update: 2023-05-20 22:17 GMT

காங்டாக்,

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் தொடர்மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது, பெரும் பாறைகள் உருண்டு விழுந்ததால் சாலைப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, லாச்சேன், லாச்சுங் பகுதிகள் நேற்று முன்தினம் கனமழையால் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில் அந்த பகுதிக்கு சென்றிருந்த சுமார் 500 சுற்றுலா பயணிகள் திரும்பமுடியாமல் தவித்தனர்.

மீட்பு

இதுகுறித்து ராணுவத்தினருக்கு அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

அதையடுத்து விரைந்து சென்ற ராணுவ வீரர்கள், 54 குழந்தைகள் உள்பட சுமார் 500 சுற்றுலா பயணிகளை மீட்டனர். அவர்களை வெவ்வேறு ராணுவ முகாம்களுக்கு அழைத்து சென்று, சூடான உணவும், புதிய ஆடைகளும் வழங்கினர்.

இரவில் அவர்கள் தங்குவதற்கு தங்கள் இருப்பிடங்களையும் ராணுவ வீரர்கள் தற்காலிகமாக காலிசெய்து கொடுத்தனர்.மீட்கப்பட்ட சுற்றுலா பயணிகளுக்கு உடல்நல பரிசோதனையையும் ராணுவ மருத்துவ குழுவினர் மேற்கொண்டனர்.

அவர்களில் உடல்நிலை சற்று மோசமாக இருந்த ஒரு பெண், அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.

ராணுவத்தின் உடனடி மீட்பு நடவடிக்கையால், அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தவிர்க்கப்பட்டுள்ளது. விரைவாக சாலைகளை சீர்செய்யும் பணி தொடங்கியுள்ளது. சாலைப் போக்குவரத்து மீண்டும் தொடங்கும்வரையில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்படும் என ராணுவ செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்