'அசாம் தேநீர் உலகம் முழுவதும் சென்றடைந்துள்ளது' - தேயிலை தோட்டத்தை பார்வையிட்டு பிரதமர் மோடி நெகிழ்ச்சி

சுற்றுலா பயணிகள் அசாமில் உள்ள தேயிலை தோட்டங்களை பார்வையிட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

Update: 2024-03-09 12:49 GMT

Image Courtesy : @narendramodi

திஸ்பூர்,

பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயணமாக அசாம் மாநிலத்திற்கு சென்றுள்ளார். நேற்று அசாம் மாநிலம் சென்றடைந்த அவர், இன்று காலை 5.30 மணிக்கு அம்மாநிலத்தின் புகழ்பெற்ற காசிரங்கா தேசிய பூங்காவிற்கு சென்றார். பூங்காவை சுற்றிப் பார்த்த பிரதமர் மோடி, அங்கு யானை சவாரி செய்தார்.

இதைத் தொடர்ந்து அங்குள்ள தேயிலை தோட்டத்திற்குச் சென்று பிரதமர் மோடி பார்வையிட்டார். இது குறித்து தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட அவர், "அசாம், அதன் அற்புதமான தேயிலை தோட்டங்களுக்கு பெயர் பெற்றது. மேலும் அசாம் தேநீர் உலகம் முழுவதும் சென்றடைந்துள்ளது. உலகெங்கிலும் அசாமின் மதிப்பை உயர்த்தும் வகையில் உழைத்து வரும் தேயிலை தோட்ட தொழிலாளர்களை நான் பாராட்ட விரும்புகிறேன். சுற்றுலா பயணிகள் அசாம் மாநிலத்திற்குச் செல்லும்போது இந்த தேயிலை தோட்டங்களை பார்வையிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

அவரது பதிவிற்கு அசாம் முதல்-மந்திரி ஹிமாந்தா பிஸ்வா 'எக்ஸ்' தளத்தில் அளித்துள்ள பதிலில், "அசாம் தேயிலை நடைமுறைக்கு வந்ததில் இருந்து கடந்த 200 ஆண்டுகளில் முதல் முறையாக, நமது தேயிலை தோட்ட தொழிலாளர் சமூகம் வளர்ச்சியை கண்டு வருகிறது. பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், அவர்களுக்கான புதிய பள்ளிகள், மருத்துவமனைகள், அதிக ஊதியம் மற்றும் சிறந்த வாய்ப்புகளை பெறுவதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.


 

Tags:    

மேலும் செய்திகள்