புதியவர்களை கட்சியில் சேர்க்கும் முன் கட்சி மேலிடத்திடம் அனுமதி பெற வேண்டும்

புதியவர்களை கட்சியில் சேர்க்கும்போது கட்சி மேலிடத்தின் அனுமதி பெற வேண்டும் என்று பா.ஜனதா மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-11-30 21:32 GMT

பெங்களூரு-

விமர்சனத்திற்கு உள்ளானது

கர்நாடக பா.ஜனதாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதியவர்கள் கட்சியில் சேர்ந்தனர். மண்டியா மாவட்டத்தை சேர்ந்த நடிகை சுமலதா எம்.பி.யின் ஆதரவாளர் சச்சிதானந்தா, ரவுடி பைட்டர் ரவி ஆகியோர் பா.ஜனதாவில் சேர்ந்தனர். அதே போல் இன்னொரு ரவுடி 'சைலண்ட்' சுனிலுடன் பா.ஜனதா எம்.எபி.க்கள் ஒரு நிகழ்ச்சியில் மேடையை பகிர்ந்து கொண்டனர்.

அவரும் விரைவில் பா.ஜனதாவில் சேர இருப்பதாக தகவல் வெளியானது. ரவுடிகள் ஒவ்வொருவராக பா.ஜனதாவில் சேருவது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. பா.ஜனதாவில் புதிதாக ரவுடிகள் அணி தொடங்கப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது. இது பா.ஜனதாவுக்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது.

மிகுந்த எச்சரிக்கை

இந்த நிலையில், கட்சியில் புதியவர்களை சேர்க்கும்போது கட்சி மேலிடத்தின் அனுமதி பெற வேண்டும் என்று கர்நாடக பா.ஜனதாவுக்கு பா.ஜனதா மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பா.ஜனதா மேலிடம் அறிவுறுத்தியுள்ள அம்சங்கள் வருமாறு:-

கட்சி நடவடிக்கைகளை மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். நாம் எதையும் மக்களிடம் இருந்து மறைக்க முடியாது. இத்தகைய சூழ்நிலையில் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும். ஊடகங்களை விட சமூக வலைதள ஊடகங்களில் தகவல்கள் இன்னும் வேகமாக பரவுகின்றன. அது மக்களை போய் சென்றடைகின்றன.

திருப்தி அளிக்கவில்லை

இதனால் அரசுக்கும், கட்சிக்கும் மக்களிடம் அவப்பெயர் ஏற்பட்டு பின்னடைவை ஏற்படுத்திவிடும். ஒரு சில தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்று கருதி குற்ற பின்னணி உள்ளவர்களை கட்சியில் சோ்த்து கொண்டால், அது பிற பகுதிகளில் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் கர்நாடக பா.ஜனதா புதியவர்களை சேர்த்த விஷயத்தில் எடுத்த முடிவு எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை.

இத்தகைய விஷயங்களில் பொது வெளியில் உங்களால் பேசுவதற்கும் கடினமான நிலை ஏற்படும். ரவுடிகளை கட்சியில் சேர்த்து கொள்வதன் மூலம் மக்களுக்கு நீங்கள் எந்த மாதிரியான தகவலை வெளிப்படுத்துகிறீர்கள். அதனால் கட்சியில் சேர விரும்புகிறவர்களின் பின்னணியை அறியாமல் யாரையும் சேர்த்து கொள்ளக்கூடாது.

காத்திருக்கிறார்கள்

ஒருவேளை இத்தகைய நபர்கள் பிரதமர் மோடியுடன் மேடையை பகிர்ந்து கொண்டால் அது சர்வதேச அளவில் ஊடகங்களில் செய்தி வெளியாகும். நமது அரசியல் எதிரிகள் இதற்காக காத்திருக்கிறார்கள். அதனால் 2 தொகுதிகளில் தோற்றால் எதுவும் ஆகிவிடாது. அதனால் புதியவர்களை கட்சியில் சேர்க்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு மேலிட தலைவர்கள் கூறியுள்ளதாக

சொல்லப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்