பாதயாத்திரையில் சோனியா காந்தி பங்கேற்றதால் பா.ஜனதாவுக்கு பாதிப்பு இல்லை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி

ராகுலின் பாதயாத்திரையில் சோனியா காந்தி பங்கேற்றதால் பா.ஜனதாவுக்கு பாதிப்பு இல்லை என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

Update: 2022-10-06 18:45 GMT

பெங்களூரு:

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சாதனை மாநாடுகள்

கர்நாடகத்தில் ராகுல் காந்தியின் பாதயாத்திரை நடந்து வருகிறது. இதில் சோனியா காந்தி கலந்துகொண்டு வெறும் அரை கிலோ மீட்டர் தூரம் மட்டுமே நடந்துள்ளார். இந்த பாதயாத்திரையால் பா.ஜனதாவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. பொதுவாக எல்லா கட்சிகளின் தலைவர்களும் தங்கள் கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறார்கள்.

அதன்படி சோனியா காந்தி தனது கட்சி பாதயாத்திரையில் கலந்து கொண்டுவிட்டு சென்றுள்ளார். என்னை பொறுத்தவரையில் இதனால் எங்களுக்கு எந்த சிக்கலும் கிடையாது. எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. நாங்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் எங்கள் அரசின் சாதனை விளக்க மாநாடுகளை நடத்துகிறோம். இது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. அதன்படி மாநாடுகள் நடைபெறும்.

தசரா பண்டிகை

மேலும் எங்கள் கட்சியின் தலைவா்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை பலப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவார்கள். தசரா பண்டிகை முடிவடைந்த பிறகு இந்த பயணத்தை மேற்கொள்ள ஏற்கனவே திட்டமிட்டோம். அதன்படி விரைவில் எங்களின் சுற்றுப்பயணம் தொடங்கும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்