காமன்வெல்த் போட்டி: பதக்கம் வென்ற வீரர்களுக்கு அரியானா அரசு பரிசுத் தொகை அறிவிப்பு

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற அரியானா வீரர்களுக்கு அம்மாநில அரசு பரிசுத் தொகையை அறிவித்துள்ளது.

Update: 2022-08-10 17:08 GMT

சண்டிகர்,

கடந்த ஜூலை 29ம் தேதி தொடங்கிய காமன்வெல்த் போட்டிகள் ஒருநாள் கூட இடைவெளி இல்லாமல் இன்றுடன் முடிவடைந்தது. காமன்வெல்த் வரலாற்றிலேயே அதிகப்படியான வீரர், வீராங்கனைகள் இந்தாண்டு கலந்துக்கொண்டனர்.

72 நாடுகளில் இருந்து மொத்தமாக 5,054 பேர் கலந்துக்கொண்டதாக அறிவிக்கப்பட்டது. தடகளம், மல்யுத்தம், நீச்சல், குத்துச்சண்டை, கிரிக்கெட் உள்ளிட்ட 280 விதமான போட்டிகள் நடத்தப்பட்டது. நடைபெற்று வந்த போட்டிகளில் ஆஸ்திரேலியா 67 தங்கம், 57 வெள்ளி, 54 வெண்கலம் என மொத்தமாக 178 பதக்கங்களுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.

இங்கிலாந்து 176 பதக்கங்களை வென்று ( 57 தங்கம், 66 வெள்ளி, 53 வெண்கலம் ) 2வது இடத்தை பிடித்தது. 3வது இடத்தில் கனடா 92 பதக்கங்களுடன் உள்ளது.

இந்தியா 61 பதக்கங்களுடன் 4வது இடத்தை பிடித்துள்ளது. இந்தியா மொத்தமாக 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் ஆகியவற்றை வென்றுள்ளது. இந்தியாவுக்கு அதிகப்படியாக மல்யுத்தத்தில் இருந்து 12 பதக்கங்கள் கிடைத்துள்ளன. பளுதூக்குதலில் இருந்து இந்தியாவுக்கு 12 பதக்கங்களும், தடகளத்தில் இருந்து 8 பதக்கங்களும் வந்துள்ளன. டேபிள் டென்னிஸில் 4 பதக்கங்கள் வந்துள்ளன.

இந்நிலையில் காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற அரியானா வீரர்களுக்கு அம்மாநில அரசு பரிசுத் தொகையை அறிவித்துள்ளது. இதன்படி தங்கப் பதக்கம் வென்ற அரியானா வீரர்களுக்கு ரூ.1.5 கோடியும், வெள்ளிப்பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரூ.75 லட்சமும், வெண்கலப்பதக்கம் வென்ற வீரர்களுக்கு ரூ.50 லட்சமும் வழங்கப்படும் என்றும், 4ஆம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.15 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும் என்று அரியானா அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்