குவைத் மன்னர் மறைவு; இந்தியா முழுவதும் நாளை ஒரு நாள் துக்கம் கடைப்பிடிக்க அரசு முடிவு

இந்த நாளில் அரசு கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறாது என்று மத்திய உள்துறை அமைச்சக தகவல் தெரிவிக்கின்றது.

Update: 2023-12-16 17:02 GMT

புதுடெல்லி,

எண்ணெய் வளம் நிறைந்த நாடுகளில் ஒன்றான குவைத்தின் மன்னராக 3 ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்தவர் ஷேக் நவாப் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபா (வயது 86). கடந்த மாதத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானார்.

இதனை தொடர்ந்து அந்நாட்டு அரசு தொலைக்காட்சியில் அதுபற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்காக, பிற நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டன.

அவரது மறைவு பற்றிய தகவலை அறிக்கை ஒன்றின் மூலம் குவைத் அரசு தெரிவித்துள்ளது. அதில், குவைத் அரசின் மன்னர் ஷேக் நவாப் அல்-அஹ்மத் அல்-சபாவின் மறைவுக்கு மிகுந்த சோகத்துடனும், துக்கத்துடனும் இரங்கல் தெரிவித்து கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளது.

அவரது சகோதரர் மறைவுக்கு பின் 2020-ல் மன்னராக அவர் பொறுப்பேற்றார். கடந்த மாதம் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவரது உடல் நலம் முன்னேறியது என கூறப்பட்டது. இந்நிலையில், அவர் இன்று காலமானார்.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ள செய்தியில், குவைத் மன்னர் ஷேக் நவாப் அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபா இன்று மறைந்து விட்டார்.

அவருக்கு மதிப்பளிக்கும் வகையில், இந்தியா முழுவதும் நாளை (17-ந்தேதி) ஒரு நாள் துக்கம் கடைப்பிடிப்பது என இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதேபோன்று, தேசிய கொடி எப்போதும் பறக்க விடப்படும் அனைத்து கட்டிடங்களிலும், நாடு முழுவதும் நாளை அரை கம்பத்தில் பறக்க விடப்படும். இந்த நாளில் அரசு கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறாது என்று தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்