சபரிமலை கோவிலில் திரண்ட பக்தர்கள்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் கொட்டும் மழையிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-09-18 20:30 GMT

புரட்டாசி மாத பூஜை

சபரிமலை அய்யப்பன் கோவிலில் புரட்டாசி மாத பூஜைக்காக நேற்று முன்தினம் மாலை நடை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். இரவு வழக்கம் போல் 10.30 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

நேற்று அதிகாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டது. வழக்கமான பூஜைகளுடன் நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய்யபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, மாலை 6 மணிக்கு தீபாராதனையை தொடர்ந்து புஷ்பாபிஷேகம் நடைபெற்றது.

கொட்டும் மழையில் தரிசனம்

வழக்கம் போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையிலேயே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆன்லைனில் முன்பதிவு செய்யாதவர்களுக்கு, சபரிமலை தரிசனத்திற்கான உடனடி முன்பதிவு செய்ய நிலக்கல், பம்பையில் சிறப்பு வசதி செய்யப்பட்டிருந்தது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பு இருந்த போதிலும் கோவிலில் கட்டுப்பாடு இல்லை. எனவே திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் அய்யப்பனை தரிசனம் செய்ய காத்திருந்தனர். அப்போது பலத்த மழை பெய்தது. எனினும் பக்தர்கள் அதனை பொருட்படுத்தாமல் சரண கோஷம் முழங்க அய்யப்பனை தரிசனம் செய்தனர். புரட்டாசி மாத பூஜைக்காக வருகிற 22-ந் தேதி வரை நடை திறக்கப்பட்டிருக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்