சீதை சிகரெட் பிடித்தபடி நாடகம்; பேராசிரியர், மாணவர்கள் கைது

லலித் கலா கேந்திரா துறையின் தலைவர் பிரவீன் போலே மற்றும் மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-02-03 16:27 GMT

புனே,

மராட்டியத்தின் புனே நகரத்தில் உள்ள புனே பல்கலைக்கழகத்தில் ராமலீலை அடிப்படையில் நாடகம் ஒன்று நடத்தப்பட்டது. இதில், மத உணர்வுகளை புண்படுத்தும்படியான சில விசயங்கள் நடந்துள்ளன. எதிர்ப்புக்குரிய வசனங்கள் மற்றும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.

இதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர்களுக்கும், புனே பல்கலைக்கழகத்தின் லலித் கலா கேந்திரா மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதுபற்றி ஏ.பி.வி.பி. செயல்பாட்டாளரான ஹர்ஷவர்தன் ஹர்புடே அளித்த புகாரின் பேரில் வழக்கு ஒன்று பதிவாகி உள்ளது. இதில், லலித் கலா கேந்திரா துறையின் தலைவர் பிரவீன் போலே, மாணவர்களான பவேஷ் பாட்டீல், ஜெய் பட்னாகர், பிரதமேஷ் சாவந்த், ரிஷிகேஷ் தல்வி மற்றும் யாஷ் சிக்லே ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதுபற்றிய எப்.ஐ.ஆர். பதிவில், ராமலீலையில் சீதை வேடமேற்று நடித்த ஆண் கலைஞர் ஒருவர் சிகரெட் குடிப்பது போன்று காட்சியளித்தும், ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தியும் இருக்கிறார்.

இதற்கு ஏ.பி.வி.பி. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து, நாடகம் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறி கோஷம் போட்டிருக்கின்றனர். இதனால், கலைஞர்களுக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. உறுப்பினர்களை அவர்கள் தாக்கியும் இருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்