சென்னை-கொச்சி விமான கட்டணம் உயர்வு.. கூடுதல் விமானங்கள் இயக்க கோரிக்கை
சென்னையில் இருந்து கொச்சி செல்லும் விமானங்களில் அதிக அளவில் அய்யப்ப பக்தர்கள் பயணிக்க தொடங்கி உள்ளனர்.;
கோப்புப்படம்
பெங்களூரு,
ஜனவரி 20-ந்தேதி வரை விமானத்தில் இருமுடி எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இருந்து கொச்சி செல்லும் விமானங்களில் அதிக அளவில் அய்யப்ப பக்தர்கள் பயணிக்க தொடங்கி உள்ளனர். இதனால் சென்னை-கொச்சி இடையே இயக்கப்படும் அனைத்து விமானங்களிலும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதன்காரணமாக சென்னையில் இருந்து கொச்சி செல்லும் விமானங்களில், டிக்கெட் கட்டணமும் 3 மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளன.
சென்னையில் இருந்து வழக்கமாக கொச்சி செல்வதற்கு ரூ.3,681 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது சென்னை-கொச்சி விமானங்களில் ரூ.10,500 தொடங்கி ரூ11,500 வரையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிலும் சென்னை- கொச்சி நேரடி விமானத்துக்கு மட்டுமே இந்த கட்டணங்கள். நேரடி விமானங்களில் டிக்கெட்டுகள் கிடைக்காமல் சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக கொச்சி சென்றால் டிக்கெட் கட்டணம் ரூ.17 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.
சபரிமலை சீசன் நேரங்களில் சென்னை-கொச்சிக்கு கூடுதல் விமானங்கள் இயக்கப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு தினமும் சென்னை- கொச்சி இடையே 9 விமானங்களும், கொச்சி- சென்னை இடையே 9 விமானங்களும் என மொத்தம் 18 விமானங்கள் இயக்கப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு இருமார்க்கமாகவும் மொத்தம் 14 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. கடந்த ஆண்டைவிட 4 விமானங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் அய்யப்ப பக்தர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சபரிமலை சீசன் முடியும் வரையில் சென்னை-கொச்சிக்கு கூடுதல் விமான சேவைகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அய்யப்ப பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.