300 இந்தியர்களை மீட்க முயற்சி: விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கு முதல்-அமைச்சர் கடிதம்
மியான்மரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற் கிடையே அவர்களை விரைந்து மீட்க நட வடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.;
புதுடெல்லி,
தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் இருந்தும், கடலூர் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் சுமார் 50 வாலிபர்கள் தாய்லாந்துக்கு வேலைக்கு சென்றனர்.
கடத்தப்பட்டனர்
தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களின் ஆசைவார்த்தையில் மயங்கி அவர்கள் வேலைக்கு சென்றனர். பாஸ்போர்ட், விசா ஆகியவற்றுக்கு பெரும் பணம் செலவழித்து அங்கு போய் சேர்ந்தனர்.
ஆனால், வாக்குறுதி அளித்த வேலை அவர்களுக்கு வழங்கப்படவில்லை. அதற்கு மாறாக, அவர்கள் துப்பாக்கி முனையில் பிணைக்கைதிகளாக மியான்மர் நாட்டுக்கு கடத்திச்செல்லப்பட்டனர்.
50 தமிழர்கள் உள்பட சுமார் 300 இந்தியர்கள் இப்படி கடத்திச்செல்லப்பட்டுள்ளனர். மியான்மர் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள மியாவாடி என்ற நகரில் அவர்கள் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர்.
சித்ரவதை
அந்த நகரம், மியான்மர் அரசின் முழு கட்டுப்பாட்டில் இல்லை என்று கூறப்படுகிறது. இனவாத ஆயுத குழுக்களின் ஆதிக்கத்தில் இருப்பதாக தெரிகிறது.
அந்த ஆயுத குழுக்கள், இந்தியர்களை குற்றச்செயல்களில் ஈடுபடுமாறு வற்புறுத்தி வருகின்றன. அதற்கு இந்தியர்கள் சம்மதிக்காததால், அவர்கள் மீது மின்சாரத்தை பாய்ச்சி சித்ரவதை செய்து வருகிறார்கள்.
அப்படியும் சம்மதிக்கவில்லை என்றால், 5 ஆயிரம் அமெரிக்க டாலர் கொடுத்தால் விட்டு விடுகிறோம் என்று மிரட்டுகிறார்கள்.
கோரிக்கை
இதனால் அவர்களிடம் சிக்கியுள்ள இந்தியர்கள் செய்வதறியாமல் திகைத்து வருகிறார்கள். தங்களை விரைவில் மீட்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
பிணைக்கைதியாக உள்ள கடலூரை சேர்ந்த ஒரு வாலிபர் வெளியிட்ட வீடியோ மூலம் இந்த திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கக்கோரி, அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்தவண்ணம் உள்ளனர்.
30 பேர் மீட்பு
இதற்கிடையே, மியான்மர் நாட்டின் தலைநகர் யங்கூனில் உள்ள இந்திய தூரகம், பிணைக்கைதிகளாக சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது. மியான்மர் அரசுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறது.
நேற்று முன்தினம் 30 இந்தியர்களை மீட்டு விட்டதாக இந்திய தூதரகம் தெரிவித்தது. பாதுகாப்பு சவால்கள் மற்றும் சட்டரீதியான, தளவாட சிரமங்களை மீறி, அவர்கள் மீட்கப்பட்டதாக கூறியுள்ளது.
மற்ற இந்தியர்களையும் மீட்க சாத்தியமான எல்லா நடவடிக்கைகளும் எடுத்து வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு முயற்சி
இந்தநிலையில், இந்தியர்களை மீட்பதில் மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளீதரன் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மியான்மர் நாட்டில் இந்தியர்கள் பிணைக்கைதிகளாக சிக்கி இருப்பது குறித்து அங்குள்ள இந்திய தூதர் வினய் குமாரை தொடர்பு கொண்டு பேசினேன். தற்போதைய நிலவரத்தை தூதர் எடுத்துரைத்தார்.
கூடிய விரைவில் எல்லா இந்தியர்களையும் பத்திரமாக மீட்க எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். இந்திய தூதரம், இப்பிரச்சினையை அக்கறையுடன் கண்காணித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வலையில் விழ வேண்டாம்
இந்திய தூதரகம் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், இந்தியர்களை வேலைக்கு எடுக்கும் மியான்மர் நாட்டின் கிழக்கு எல்லைப்புறத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவர்களின் வலையில் இந்திய தகவல் தொழில்நுட்ப பட்டதாரிகள் சிக்க வேண்டாம் என்றும், அத்தகைய நிறுவனங்களின் கடந்தகால செயல்பாடுகளை சரிபார்த்துக்கொள்ளுமாறும் கூறியுள்ளது.
மு.க.ஸ்டாலின் கோரிக்கை
இந்தநிலையில் மியான்மர் நாட்டில் சிக்கித்தவிக்கும் 50 தமிழர்கள் உள்ளிட்ட 300 இந்தியர்கள் நாடு திரும்ப விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மியான்மர் நாட்டில் சுமார் 50 தமிழர்கள் உள்பட 300 இந்தியர்கள் கடுமையான இன்னல்களுக்கு ஆட்பட்டிருப்பதாக மாநில அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது என்பதை உங்களின் உடனடி கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
அவர்கள் தொடக்கத்தில் தனியார் ஆள்சேர்ப்பு முகமைகள் மூலம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான வேலைகளுக்காக தாய்லாந்து நாட்டிற்கு சென்றதாக தெரிய வந்துள்ளது.
தாக்குதல்
ஆனால், ஆன்லைனில் சட்டவிரோத வேலைகளை மேற்கொள்ளும்படி அவர்கள் தாய்லாந்தில் இருந்து மியான்மருக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. அவர்கள் அத்தகைய சட்டவிரோத வேலைகளை செய்ய மறுத்ததால் வேலையளிப்போரால் கடுமையாக தாக்கப்படுகிறார்கள் என்றும் தகவல்கள் வருகின்றன.
அவர்களில் 17 தமிழர்களுடன் மாநில அரசு தொடர்பில் உள்ளது. தங்களை விரைவாக மீட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அரசின் உதவியை நாடுகின்றனர்.
உடனடி நடவடிக்கை
மியான்மரில் சட்டவிரோதமாக சிறைப்பிடிக்கப்பட்டுள்ள நமது குடிமக்களின் அவல நிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாக அவர்களை மீட்பதற்கும், பாதுகாப்பாக தாயகத்திற்கு திரும்ப அழைத்து வரவும் மியான்மரில் உள்ள தூதரகம் இப்பிரச்சினையில் விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வெளியுறவு அமைச்சகத்திற்கு உரிய அறிவுறுத்தல்களை நீங்கள் வழங்க வேண்டும்.
இதுதொடர்பாக நீங்கள் அவசரமாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.