கர்நாடகத்தில் மின் கட்டணம் மீண்டும் உயர்வு: வருகிற 1-ந் தேதி முதல் அமல்

கர்நாடகத்தில் மின் கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. வருகிற 1-ந் தேதி ஒரு யூனிட்டுக்கு 45 பைசா உயருகிறது. இதனால் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2022-09-23 18:45 GMT

பெங்களூரு:

சீரமைவு கட்டணம்

கர்நாடகத்தில் மின் கட்டணம் கடந்த ஏப்ரல் மாதம் தான் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு சீரமைவு (அட்ஜஸ்ட்மென்டு) கட்டணமும் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் எரிபொருள் அதாவது நிலக்கரி கொள்முதல் செலவு அதிகரித்துள்ளதால் சீரமைவு கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி, பெங்களூரு மின்சார வினியோக நிறுவன (பெஸ்காம்) எல்லையில் ஒரு யூனிட்டுக்கு 43 பைசா வசூலிக்கப்படும். மங்களூரு மின்சார வினியோக நிறுவன (மெஸ்காம்) எல்லை பகுதியில் 24 பைசாவும், உப்பள்ளி மின்சார வினியோக நிறுவன (ஹெஸ்காம்) எல்லை பகுதிகளில் 35 பைசாவும், கலபுரகி மின்சார வினியோக (ஜெஸ்காம்) எல்லை பகுதியில் 35 பைசாவும், சாமுண்டீஸ்வரி மின்சார வினியோக நிறுவன (செஸ்காம்) எல்லை பகுதியில் 34 பைசாவும் அதிகரித்துள்ளது.

மக்கள் அதிர்ச்சி

இந்த கட்டணம் வருகிற 1-ந் தேதி முதல் வசூலிக்கப்படும் என்றும், இது வருகிற மார்ச் மாதம் வரை அமலில் இருக்கும் என்றும் கர்நாடக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் கர்நாடகத்தில் மின்சார கட்டணம் மீண்டும் உயருகிறது.

விலைவாசி உயர்வால் மாநில மக்கள் ஏற்கனவே கடும் நெருக்கடியில் உள்ளனர். இந்த நிலையில் மின் கட்டணத்தை மீண்டும் அரசு உயர்த்தி இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்