2 பேர் உயிரிழப்பு: புதிய வகை வைரஸ் குறித்து பதற்றம் வேண்டாம் - நிபுணர்கள் தகவல்

புதிய வகை வைரஸ் தாக்குதலுக்கு 2 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், இந்த தொற்று பரவல் குறித்து பதற்றம் வேண்டாம் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.

Update: 2023-03-12 22:24 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்புளூயன்சா துணை வகை வைரசான எச்3என்2 பரவி வருகிறது. கடந்த ஜனவரி 2 முதல் மார்ச் 5-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் 450-க்கு மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

இதில் கர்நாடகா மற்றும் அரியானாவை சேர்ந்த தலா ஒருவர் சமீபத்தில் உயிரிழந்து உள்ளனர்.

இது மக்களிடையே பெருத்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவும் மற்றுமொரு கொரோனா தாக்குதலாக இருக்குமோ? என அவர்கள் பதற்றமடைந்து வருகின்றனர்.

பதற்றம் தேவையில்லை

ஆனால் இந்த புதிய வகை வைரஸ் குறித்து பதற்றமடைய வேண்டாம் என நிபுணர்கள் கூறியுள்ளனர். அதேநேரம் கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

அந்தவகையில், அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்னணி டாக்டர்களில் ஒருவரான தருண் சகானி கூறுகையில், 'இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் தேவை எழவில்லை. வெறும் 5 சதவீதத்தினர் மட்டுமே தங்கி சிகிச்சை பெறுகின்றனர். எனவே பதற்றம் தேவையில்லை. கொரோனா காலத்தில் கடைப்பிடித்தது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் போதும்' என்றார்.

ஒவ்வொரு ஆண்டும் இந்த காலகட்டத்தில் இத்தகைய தொற்று பரவல் இயற்கைதான் எனக்கூறிய அவர், என்றாலும் இந்த ஆண்டு வழக்கத்தை விட 2 அல்லது 3 மடங்கு அதிகமாக இருப்பதாகவும் கூறினார்.

பெரிய அலை இருக்காது

மற்றொரு டாக்டர் அகர்வால் கூறுகையில், 'காய்ச்சலுக்கான பொதுவான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் தடுப்பூசிகள் இருப்பதால், ஒரு பெரிய அலையை நான் எதிர்பார்க்கவில்லை. அதேநேரம் அனைத்துவிதமான தொற்று பரவலும், இறப்புகளும் கவலைக்குரியவைதான்' என தெரிவித்தார்.

இந்த எச்3என்2 வைரஸ் பன்றிகள் மற்றும் தொற்றுக்கு ஆளானவர்கள் மூலம் பரவுகிறது. இந்த வைரஸ் தாக்கியவர்களுக்கு பிற புளூ வைரஸ் பாதிப்புகள் போல காய்ச்சல், சுவாச கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதேநேரம் உடல்வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகளும் ஏற்படுகின்றன.

இந்த தொற்று பரவலை தடுக்க மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக மாநில அரசுகள் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்