பால் விலை உயர்வால் வரும் லாபத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்; சித்தராமையா வலியுறுத்தல்

கர்நாடகத்தில் பால் விலை உயா்வால் வரும் லாபத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

Update: 2022-11-25 18:45 GMT

பெங்களூரு:

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

பாலுக்கான ஊக்கத்தொகை

கர்நாடக அரசின் திசை மாறிய கொள்கைகளால் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் கூட்டமைப்புகள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. இதன் காரணமாக தினசரி பால் உற்பத்தி 94 லட்சம் லிட்டரில் இருந்து 77 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது. கர்நாடகத்தில் 25 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் உள்ளனர். அவர்களில் 9 லட்சம் பேருக்கு அரசு பாலுக்கான ஊக்கத்தொகை வழங்குகிறது.அதிகளவில் பால் உற்பத்தி செய்யப்படும் கோலார், சிக்பள்ளாப்பூர், பெங்களூரு புறநகர், ராமநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பால் உற்பத்தியாளர்கள் பசுக்களை வளர்ப்பதில் ஆர்வத்தை குறைத்து கொண்டுள்ளனர். எனது தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 2013ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை பாலுக்கு லிட்டருக்கு 5 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினோம்.

செழிப்பான நிலை

இதன் மூலம் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.4,700 கோடி வழங்கினோம். இந்த ஊக்கத்தொகை திட்டத்தால் மாநிலத்தில் தினசரி பால் உற்பத்தி 45 லட்சம் லிட்டரில் இருந்து 73 லட்சம் லிட்டராக அதிகரித்தது. இதனால் விவசாயிகளின் வாழ்க்கையில் செழிப்பான நிலை ஏற்பட்டது. ஆனால் அரசின் கால்நடை வளர்ப்பு கொள்கை, பால் உற்பத்தியாளர்களின் வாழ்க்கையை அழித்துவிட்டது.

பாலுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை அரசு சரியான நேரத்தில் விடுப்பது இல்லை. கடந்த 8 மாதங்களாக ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் கால்நடை தீவனங்களின் விலை அதிகரித்துவிட்டது. இதனால் நமது விவசாயிகள் கால்நடைகளை வளர்க்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேய்ச்சல் நிலங்கள்

அதனால் பாக்கி உள்ள ஊக்கத்தொகையை உடனடியாக விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்ய வேண்டும். பால் விலை உயர்வு மற்றும் நந்தினி நெய் விலை உயர்வால் கிடைக்கும் லாபத்தை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். பசுவதை தடை சட்டத்தால் விவசாயிகள் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கு அரசு நிலங்கள் இஷ்டம் போல் வழங்கப்படுகிறது. இதனால் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் மேய்ச்சல் நிலங்களை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்