தெலுங்கானா: கார் மரத்தில் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு

ஓட்டுநர் தூங்கியதால் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2024-03-04 05:44 GMT

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தில் கார் ஒன்று அதிவேகத்தில் தறிகெட்டு ஓடிய நிலையில், மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில், 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் உள்பட 12 பேர் கார் ஒன்றில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தனர்.

திருமண நிகழ்ச்சியை முடித்துவிட்டு, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் நேற்றிரவு சொந்த ஊருக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர். கார் ஐதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கொத்தகோட்டா அருகே நள்ளிரவு 2 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், சாலையோரம் இருந்த மரத்தின் மீது அதிவேகத்தில் மோதியது.

இந்த விபத்தில் 7 மாத குழந்தை யசீர், 2 வயது குழந்தை புஸ்ரா, 5 வயது குழந்தை மரியா, 62 வயதான அப்துல் ரஹ்மான், 85 வயதான சலீமா ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். அருகில் இருந்தவர்கள் உடனடியாக காயம் அடைந்தவர்களை மீட்டு ஆந்திர மாநிலம் கர்னூல் மற்றும் வனப்பர்த்தி மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் 2 குழந்தைகள் உள்பட 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காரை ஓட்டி வந்த ஓட்டுநர், தூக்க கலக்கத்தில் இருந்ததே விபத்திற்கு காரணம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த விபத்தில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. இதனால் காரில் சிக்கி இருந்த உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்பதில் மீட்புப்படையினருக்கு சிக்கல் நிலவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்