மைசூரு நகரை அழகுப்படுத்த வளர்க்கப்படும் பூச்செடிகள்
தசரா விழாவையொட்டி மைசூரு நகரை அழகுப்படுத்த தோட்டக்கலை துறை சார்பில் பூச்செடிகள் வளர்க்கப்படுகிறது.
மைசூரு
தசரா விழா
மைசூருவில் ஆண்டுதோறும் விஜயதசமியையொட்டி தசரா விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த தசரா விழா உலகப்பிரசித்தி பெற்றதாகும்.
இந்த ஆண்டு தசரா விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந்தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
இந்தநிலையில் தசரா விழாவின் போது பழமையான கட்டிடங்கள் முக்கிய இடங்களில் வைத்து அழகு படுத்துவதற்காக மைசூரு தோட்டக்கலை துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் பூச்செடிகள், அலங்கார செடிகள் வளர்க்கப் பட்டு வருகின்றன.
இதற்காக மைசூரு டவுன் அரண்மனை அருகே உள்ள கர்ஜன் பார்க், பி.என்.ரோடு அருகே உள்ள தோட்டக்கலை துறை வளாகம், குப்பண்ணா பூங்கா, அரண்மனை முன்பு உள்ள பூங்கா உள்பட பல்வேறு நர்சரிகள் மூலமாக பூச்செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது.
அலங்கார செடிகள்
இந்த பூச்செடிகள், அலங்கார செடிகள் கடந்த 15 நாட்களாக வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த பூச்செடிகள் தசரா விழா தொடங்குவதற்கு முன்பே வளர்ந்து பூக்கள் பூக்க தொடங்கிவிடும்.
குப்பண்ணா பூங்காவில் தசரா மலர் கண்காட்சிக்காக 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூச் செடிகளை வளர்த்து வருகிறார்கள்.
இதில் ரோஜா, குண்டு மல்லி , அலங்காரப் பூ, ஊட்டி மற்றும் காஷ்மீர் ரோஸ் ஆகிய செடிகள் மற்றும் பல்வேறு வகையான காய்கறி செடிகள் வளர்க்கப்பட்டு வருகிறது.
மைசூரு டவுனில் கலெக்டர் அலுவலகம், மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், காவிரி நீர் வாரிய அலுவலகம், மூடா அலுவலகம், மத்திய அரசுக்கு சொந்தமான அலுவலகங்கள் உள்பட பல்வேறு அரசு கட்டிடங்கள் முன்பு பூச்செடிகள் அலங்காரப் படுத்தப்பட உள்ளது.
உரிமையாளர்களுக்கு அனுமதி
மலர் கண்காட்சியில் பங்கேற்க தனியார் மையங்கள், வீடுகள், தொழிற்சாலைகளின் உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பூச்செடிகளை வளர்த்து வந்து மலர் கண்காட்சியில் வைக்கலாம்.
அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என தோட்டக்கலை துறை இயக்குனர் கூறினார்.