மடிக்கணினி, கையடக்க கணினிகள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு; சீன இறக்குமதியை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை

மடிக்கணினி, கையடக்க கணினி உள்ளிட்ட பொருட்களுக்கான இறக்குமதிக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Update: 2023-08-03 16:38 GMT

மடிக்கணினி

சீனாவில் இருந்து மடிக்கணினி, கையடக்க கணினி மற்றும் கம்ப்யூட்டர் சாதனங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில், அப்பொருட்களின் இறக்குமதிக்கு மத்திய அரசு நேற்று கட்டுப்பாடுகளை விதித்தது. இந்த கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வருவதாக கூறியுள்ளது. வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனரகம் இதுதொடர்பாக ஒரு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. அதில், மடிக்கணினி, கையடக்க கணினி, ஆல்-இன்-ஒன் பர்சனல் கம்ப்யூட்டர்கள், அல்ட்ரா ஸ்மால் பார்ம் பேக்டர் கம்ப்யூட்டர்கள், சர்வர்கள் ஆகியவற்றின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

உரிமம் பெறவேண்டும்

மைக்ரோ கம்ப்யூட்டர்கள், பெரிய மற்றும் மெயின்பிரேம் கம்ப்யூட்டர்கள், டேட்டா பிராசஸிங் எந்திரங்கள் ஆகியவற்றுக்கும் இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும். இனிமேல், இந்த பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசிடம் உரிமமோ அல்லது அனுமதியோ பெற வேண்டும். இந்த கட்டுப்பாடுகள், சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதை குறைக்கவும், உள்நாட்டு உற்பத்தியை பெருக்கவும் உதவும் என்று கருதப்படுகிறது.

விலக்கு

அதே சமயத்தில், ஒரு சரக்குக்கு 20 பொருட்கள்வரை இறக்குமதி செய்ய உரிமம் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. பேக்கேஜ் விதிகளின் கீழ் செய்யப்படும் இறக்குமதிக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது.

அதுபோல், ஆன்லைன் வணிக இணையதளங்கள் மூலம் வாங்கப்படும் ஒரு மடிக்கணினி, ஒரு கையடக்க கணினி உள்ளிட்ட பொருட்களுக்கு இறக்குமதி உரிமம் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இறக்குமதிக்கு வழக்கம்போல் வரிகள் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்