துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு..! பிரதமர் மோடி இரங்கல்

ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

Update: 2023-02-06 06:28 GMT

இஸ்தான்புல்,

துருக்கி- சிரியா எல்லையில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் காசியண்டெப் நகர் அருகே 17 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின. இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான் போன்ற அண்டை நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது.

அதிகாலை என்பதால் வீடுகளில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தபோது நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டிடங்கள் இடிந்து அதன் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர்.

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நிலநடுக்கத்தில் பாதிப்பு அதிக அளவில் உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நிலநடுக்கத்தால் ஏராளமானோர் உயிரிழந்த செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். நிலநடுக்கத்தால் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கறேன்.

கடுமையான நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி நாட்டுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்