தசரா விழாவில் பங்கேற்க முதற்கட்டமாக 9 யானைகள் மைசூருவுக்கு'கஜபயணம்' தொடங்கியது

மைசூரு தசரா விழாவில் பங்கேற்க முதற்கட்டமாக 9 யானைகள் மைசூருவுக்கு கஜ பயணத்தை நேற்று தொடங்கியது. வருகிற 5-ந் தேதி அரண்மனைக்கு அவைகள் முறைப்படி அழைத்து வரப்பட உள்ளது.

Update: 2023-09-01 23:13 GMT

மைசூரு:

மைசூரு தசரா விழா உலகப்புகழ் பெற்றது. 400 வருடங்களுக்கும் மேலாக நடந்து வரும் மைசூரு தசரா விழா கர்நாடகத்தின் பாரம்பரியம், கலாசாரம் ஆகியவற்றை எடுத்துரைக்கும் சின்னமாக விளங்கி வருகிறது. மைசூரு தசரா விழாவில் சிகர நிகழ்ச்சியாக 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்க, அதை யானைகள் புடைசூழ ஒரு யானை சுமந்து வரும் ஜம்பு சவாரி ஊர்வலம் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.

இந்த ஆண்டுக்கான தசரா விழா அடுத்த மாதம்(அக்டோபர்) 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக நடைபெற உள்ளது. அக்டோபர் 15-ந்தேதி சாமுண்டிமலையில் வீற்றிருக்கும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மலர்கள் தூவி விழாவை பிரபல இசை அமைப்பாளர் ஹம்சலேகா ெதாடங்கிவைக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் யானைகளை தேர்வு செய்யும் பணி நடந்தது. அதன்படி இந்த ஆண்டுக்கான தசரா விழாவில் மொத்தம் 15 யானைகள் பங்கேற்க உள்ளது. தசரா விழாவையொட்டி எப்போதும் ஒரு மாதத்திற்கு முன்னதாக தசரா யானைகள் மைசூருவுக்கு அழைத்து வரப்பட்டு வெடி வெடித்தும், மேளதாளம் சத்தம் கேட்டு மிரளால் இருக்கவும், நடைபயிற்சியும் அளிக்கப்படும்.

இதற்காக பல முகாம்களில் பராமரிக்கப்படும் யானைகள் 2 கட்டமாக வீரனஒசஹள்ளி கிராமத்தில் இருந்து மைசூருவுக்கு அழைத்து வரப்படுவது வழக்கம். இவ்வாறு தசரா விழாவில் பங்கேற்க மைசூருவுக்கு யானைகள் அழைத்து வரப்படும் நிகழ்வு கஜபயணம் என அழைக்கப்படுகிறது.

அதன்படி இந்த ஆண்டு தசரா விழாவையொட்டி முதல்கட்டமாக அபிமன்யு, அர்ஜூனா, பீமா, கோபி, தனஞ்ஜெயா, வரலட்சுமி, விஜயா, மகேந்திரா, கஞ்சன் ஆகிய 9 யானைகள் மைசூருவுக்கு கஜபயணத்தை மேற்கொண்டன. இந்த 9 யானைகளும் மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா நாகரஒலே வனப்பகுதியில் உள்ள யானைகள் முகாமில் ஒன்று சேர்க்கப்பட்டன.

அந்த யானைகளின் கஜ பயணம் நேற்று தொடங்கியது. இதற்கான நிகழ்ச்சி உன்சூர் தாலுகா வீரனஒசஹள்ளி கிராமத்தில் நடந்தது. இதையொட்டி ஸ்கூலா லக்னத்தில் யானைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

முன்னதாக 9 யானைகளையும் பாகன்கள் குளிப்பாட்டி அலங்காரம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரி எச்.சி.மகாதேவப்பா, வனத்துறை மந்திரி ஈஸ்வர் கன்ட்ரே, மைசூரு மாநகராட்சி மேயர் சிவக்குமார், ஜி.டி.ஹரீஷ்கவுடா எம்.எல்.ஏ., மஞ்சேகவுடா எம்.எல்.சி., கலெக்டர் ராஜேந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அவர்கள் அனைவரும் யானைகள் மீது பூக்களை தூவி கஜ பயணத்தை தொடங்கி வைத்தார்கள். அதையடுத்து யானைகள் அனைத்தும் கம்பீர நடைபோட்டு மைசூரு நோக்கி கஜ பயணத்தை தொடங்கின. யானைகளை வரவேற்று அழைத்துச் செல்லும் விதமாக கர்நாடகத்தின் பாரம்பரிய நடனமான டொள்ளு குனிதா நடன கலைஞர்கள் உள்பட பல்வேறு கலைக்குழுவினர் யானைகளின் முன்பு ஆடிப்பாடி நடனமாடி சென்றனர். கஜபயணத்தை தொடங்கியதும் 9 யானைகளும் தும்பிக்கைகளை தூக்கி அனைவருக்கும் வணக்கம் செலுத்தின. முன்னதாக யானைகள் சாப்பிடுவதற்கு கரும்பு, வெல்லம், கொப்பரை தேங்காய், பழங்கள் கொடுக்கப்பட்டது.

வீரனஒசஹள்ளி கிராமத்தில் இருந்து புறப்பட்ட யானைகள் சிறிது தூரம் நடந்து வந்தன. பின்னர் அவைகள் லாரியில் ஏற்றப்பட்டு மைசூரு அசோகபுரத்தில் அமைந்திருக்கும் வனத்துறை அலுவலக வளாகத்தில் கொண்டு வந்து தங்க வைக்கப்பட்டன. வருகிற 5-ந் தேதி தசரா யானைகள் அரண்மனையின் முக்கிய நுழைவுவாயில் வழியாக பாரம்பரிய முறைப்படி சிறப்பு பூஜைகளுடன் அரண்மனைக்கு அழைத்து வரப்பட உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மைசூரு தசரா விழாவுக்கு ரூ.30 கோடி நிதி

கஜ பயணத்தை தொடங்கி வைத்த பின்னர் மாவட்ட பொறுப்பு மந்திரி எச்.சி.மகாதேவப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த ஆண்டு தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தசரா விழா செலவுக்காக ரூ.30 கோடி கேட்டு முதல்-மந்திரி சித்தராமையாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மைசூருவில் நாளை(இன்று) முதல் தசரா விழா தொடர்பான எற்பாடுகள் அனைத்தும் தொடங்கி நடைபெறும். கட்டிடங்கள் சீரமைப்பு பணி, பெயிண்ட் அடிக்கும் பணி, சாலை சீரமைப்பு பணி உள்பட அனைத்து பணிகளும் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்