மராட்டியத்தில் யவத்மால் மாவட்டத்தில் விவசாயிகள் தற்கொலை அதிகரிப்பு; 205 பேர் உயிரிழப்பு

மராட்டியத்தில் நடப்பு ஆண்டில் யவத்மால் மாவட்டத்தில் மட்டுமே 205 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.

Update: 2022-09-13 05:16 GMT


யவத்மால்,



மராட்டியத்தில் 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு, பொருளாதார மந்தநிலை ஆகியவற்றால், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து காணப்படுகிறது. இதுபற்றி யவத்மால் மாவட்ட கலெக்டர் அமோல் யெட்ஜ் கூறும்போது, விவசாயிகளில் கடந்த ஆகஸ்டில் 48 பேரும், கடந்த செப்டம்பரில் 12 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

நடப்பு ஆண்டில் இதுவரை (செப்டம்பர் 12 வரை) மொத்தம் 205 விவசாயிகள் தற்கொலை செய்து உள்ளனர். இதுபற்றி எங்களுடைய கமிட்டி சாதக, பாதக விசயங்களை ஆய்வு செய்து வருகிறது.

நாங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்போம். அரசு திட்டத்தின்படி, அரசு அதிகாரிகள் இன்றும், நாளையும் ஒரு நாள் விவசாயிகளுடன் அமர்ந்து, குறைகளை கேட்டறிந்து, அவர்களிடம் அரசின் திட்டங்கள் மற்றும் பலன்களை எடுத்து உரைப்போம் என கூறியுள்ளார்.

மராட்டியத்தில் 2020-ம் ஆண்டு கணக்கின்படி, கடன் தொல்லையால் 2,547 விவசாயிகள் தற்கொலை செய்து உள்ளனர். 2021-ம் ஆண்டில் ஜனவரி முதலான 11 மாத காலத்தில் 2,498 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

அரசின் கடன் தள்ளுபடி திட்டங்கள் இருந்தபோதும், கடனை திருப்பி செலுத்த முடியாததற்காக விவசாயிகளின் தற்கொலை தொடருகிறது என மாநில வருவாய் துறை அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

மராட்டியத்தில் 2001 முதல் 2019 வரையிலான 20 ஆண்டுகளில் 32 ஆயிரத்து 605 விவசாயிகள் என்ற அளவில் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இது ஆண்டுக்கு சராசரியாக 1,716 என்ற அளவில் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்