41 கனடா தூதர்களை திரும்ப பெற வேண்டும் - இந்திய அரசு ஒரு வாரம் கெடு

இந்தியாவில் இருக்கும் 41 தூதர்களை ஒரு வாரத்தில் திரும்ப பெறுமாறு கனடாவிடம் இந்தியா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2023-10-03 11:08 GMT

புதுடெல்லி,

இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே சமீபகாலமாகவே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சொன்னதே இதற்கு காரணமாகும். இந்தியா இதை திட்டவட்டமாக மறுத்த நிலையில், ஆதாரத்தை வெளியிடுமாறும் வலியுறுத்தியது. இருப்பினும், எந்தவொரு ஆதாரத்தையும் கனடா இதுவரை வெளியிடவில்லை.

மேலும், கனடாவில் உள்ள இந்திய தூதரை வெளியேற ஜஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டார். இதை தொடர்ந்து இரு நாடுகளும் மாறிமாறி நடவடிக்கை எடுத்து வருகிறது. மறு அறிவிப்பு வரும் வரை கனடா நாட்டை சேர்ந்தோருக்கு விசா வழங்கப்படாது என இந்தியா அறிவித்தது.

இதற்கிடையே அடுத்தகட்ட நடவடிக்கையாக வரும் 10-ந் தேதிக்குள் அதாவது ஒரு வாரத்தில் 41 தூதர்களை திரும்ப பெறுமாறு கனடாவிடம் இந்தியா வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் பிறகு கனடா தூதர்கள் நாட்டில் தங்கி இருந்தால், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அந்தஸ்து நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தியாவுக்கு மொத்தம் 61 கனடா தூதர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையை குறைக்குமாறு இந்தியா வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்