முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் - கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு ரத்து முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-04-13 21:05 GMT

கோப்புப்படம்

பெங்களூரு,

கர்நாடகத்தில் முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 4 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த தனி இட ஒதுக்கீட்டை மாநில அரசு சமீபத்தில் ரத்து செய்து, அதை லிங்காயத், ஒக்கலிகர் சமூகங்களுக்கு சமமாக பிரித்து வழங்கியது. கர்நாடக அரசின் இந்த முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீது நேற்று நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது.

மனுதாரர் சார்பில் வக்கீல், துஷ்யந்த் தாவே ஆஜராகி வாதிடுகையில், கர்நாடகத்தில் மாநில அரசு முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து அதை பிற சமூகங்களுக்கு வழங்கியுள்ளது. இது சுப்ரீம் கோர்ட்டு முன்பு வழங்கிய தீர்ப்புகளுக்கு எதிராக உள்ளது. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. தேர்தல் நேரத்தில் இரவோடு இரவாக மாநில அரசு இவ்வாறு முடிவு எடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது?" என்று வாதிட்டார்.

நிறுத்தி வைக்கும்படி...

கர்நாடக அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடுகையில், "முஸ்லிம்களுக்கு மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. உண்மை ஆய்வு தகவல்கள் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கவில்லை" என்றார். அப்போது நீதிபதிகள், "இந்த இட ஒதுக்கீட்டு விஷயத்தில் கர்நாடக அரசு தவறான எண்ணத்தின் அடிப்படையில் முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது" என்று கருத்து தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கர்நாடக அரசு முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த புதிய முடிவை வருகிற 18-ந் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். அன்றைய தினம் இந்த மனு மீது மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்