ஜெயின் துறவியை கொன்று உடலை கூறு போட்டு ஆழ்துளை கிணற்றில் வீச்சு

பெலகாவியில் கடனை திரும்ப கேட்டதால் ஜெயின் துறவியை கொன்று உடலை கூறு போட்டு ஆழ்துளை கிணற்றில் வீசிய கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக மடத்தின் ஊழியர்கள் 2 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Update: 2023-07-08 21:33 GMT

பெங்களூரு:-

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

2 பேர் கைது

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் சிக்கோடி தாலுகா ஹிரேகோடி கிராமத்தில் நந்திபர்வத மடம் உள்ளது. இந்த மடம் ஜெயின் சமுதாயத்தினருக்கு சேர்ந்தது ஆகும். இந்த மடத்தின் ஜெயின் துறவியாகஆச்சார்யா ஸ்ரீ 108-வதுகாமகுமார நந்தி மகாராஜா என்பவர் இருந்து வந்தார். கடந்த மாதம்(ஜூன்) 5-ந் தேதி காமகுமார நந்திமகாராஜா வழக்கம்போல் இரவில் தனது அறைக்குதூங்குவதற்கு சென்றார். இந்த நிலையில் மறுநாள் காலையில் அவர் தனது அறையில் இருந்து மாயமானார். மடத்தில் இருந்தவர்கள், துறவியை அந்த பகுதியில் தேடிப்பார்த்தனர்.

ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து மடத்தின் நிர்வாக தலைவர் பீமப்பா, இதுதொடர்பாக சிக்கோடி போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மேலும் மடத்திற்கு வந்து சோதனை நடத்தினர். அப்போது துறவியின் அறையில் அவரது செல்போன், காலணி, கைத்தடி ஆகியவை இருந்தது. இது போலீசாருக்கு சந்தேகத்தை அதிகப்படுத்தியது. இதற்கிடையே மடத்தின் ஊழியர்கள் 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

திடுக்கிடும் தகவல்கள்

அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். அதையடுத்து போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. அதாவது மடத்தில் பணி செய்து வந்த அவர்கள் 2 பேரும், துறவி காமகுமார நந்தி மகாராஜாவிடம் கடன் பெற்று உள்ளனர். அந்த பணம் குறித்து துறவி கேட்டதாக கூறப்படுகிறது. கடனை திருப்பி கொடுக்க விரும்பாத அவர்கள் 2 பேரும் சேர்ந்து துறவியை கொலை செய்தது தெரிந்தது. மேலும் அவர்கள் துறவியின் உடலை துண்டு துண்டாக கூறுபோட்டு, துணிகளால் பொதிந்து, உடல் பாகங்களை அந்த பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் வீசி உள்ளனர்.

மேலும் துர்நாற்றம் வீசாமல் இருப்பதற்காக ஆழ்துளை கிணற்றின் மேல் பகுதியை சேற்றை கொண்டு மூடி உள்ளனர். இதையடுத்து துறவியின் உடல் பாகங்கள் வீசப்பட்ட பகுதி குறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் துறவியின் உடல் பாகங்களை ஆழ்துளை கிணற்றிலும், அருகில் ஓடும் ஆற்றிலும் வீசியதாக முன்னுக்குப்பின் முரணாக கூறினர்.

11 மணி நேரம்

இதையடுத்து மடம் மற்றும் உடல் வீசப்பட்டதாக கூறப்பட்ட பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் அந்த 2 பேரும் கூறிய விளை நிலத்திலும், ஆழ்துளை கிணற்றுப்பகுதியிலும் பொக்லைன் எந்திரம் கொண்டு தோண்டும் பணி தொடங்கியது. நேற்று அதிகாலையில் தொடங்கப்பட்ட பணி சுமார் 11 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது. இறுதியாக துறவியின் உடல் பாகங்கள் ஆழ்துளை கிணற்றில் 20 அடி ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டன. துறவியின் துண்டிக்கப்பட்ட தலை, கை, கால்கள் உள்ளிட்ட 9 உடல் பாகங்கள், துணிகளால் பொதிந்த நிலையில் மீட்கப்பட்டது.

மற்ற உடல் பாகங்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து துறவியின் உடல் பாகங்களை போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த 2 பேரையும் கைது செய்தனர். அவர்களது பெயர், விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.

இதற்கிடையே அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதற்காக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உடல் பாகங்களை தேடும் பணி தீவிரம்

மின்சாரம் பாய்ச்சி ஜெயின் துறவி கொலையா?

ஜெயின் துறவி காமகுமார நந்தி மகாராஜா கொலை செய்யப்பட்டது குறித்து மடத்தை சேர்ந்தவரான பிரதீப் என்பவர் கூறுகையில், 'ஜெயின் துறவி காமகுமார நந்தி மகாராஜாவை, அந்த 2 பேரும் மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்திருக்கலாம். அதன் பிறகு அவரது உடலை துண்டு, துண்டாக கூறுபோட்டு ஆழ்துளை கிணற்றில் வீசி இருக்கலாம். அவர்கள் தங்கள் மீது சந்தேகம் ஏற்படாமல் இருக்க நாங்கள் துறவியை தேடும்போது அவர்களும் எங்களுடன் சேர்ந்து தேடினர்' என்று கூறினார்.

ஜெயின் துறவி காமகுமார நந்தி மகாராஜா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பெலகாவி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சஞ்ஜீவ் பட்டீல் கூறுகையில், 'ஜெயின் துறவியிடம் கடன் பெற்றவர்கள், கடனை திருப்பி கொடுக்க மறுத்துள்ளனர். பின்னர் அவர்கள் துறவியை கொன்று உடலை துணடுகளாக்கி ஆழ்துளை கிணற்றில் வீசி உள்ளனர். அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது அவர்கள் அதை ஒப்புக் கொண்டனர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு துறவியின் 9 உடல் பாகங்கள் கிடைத்துள்ளன. மீதமுள்ள உடல் பாகங்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது' என்றார்.

சாகும் வரை உண்ணாவிரதம்

இதுகுறித்து தார்வார் மாவட்டம் உப்பள்ளியை சேர்ந்த ஜெயின் துறவியான குணதாரநந்தி மகாராஜா என்பவர் கூறுகையில், 'ஜெயின் துறவி காமகுமார நந்தி மகாராஜா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வேதனை அளிக்கிறது. அவரது படுகொலை குறித்து முதல்-மந்திரி சித்தராமையா தீவிர விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். எங்களை போன்ற சிறுபான்மையினர் தேவையில்லை என அரசு நினைக்கிறது. ஜெயின் துறவிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு எழுத்து மூலம் அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். அதுவரை சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்' என்றார்.

போலீசாருக்கு, சித்தராமையா உத்தரவு

இந்த கொலை சம்பவம் குறித்து முதல்-மந்திரி சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பெலகாவி மாவட்டத்தில் ஜெயின்மத துறவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். சட்டவிரோத செயலை செய்தவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கும். சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ள யாருக்கும் உரிமை இல்லை. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

போலீஸ் அதிகாரிகள் இந்த வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தி சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தவறு செய்தவர்கள் மீது தீவிர விசாரணை நடத்தி தண்டனையில் இருந்து அவர்கள் தப்பாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்