மராட்டியம்: சரத் பவாருடன் அஜித் பவார் அணி சந்திப்பால் பரபரப்பு

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன், அஜித் பவார் அணியினர் திடீரென சந்தித்தது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-07-16 09:03 GMT

மும்பை,

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்த அஜித் பவார், திடீரென ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இணைந்தது மராட்டிய அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியது. பின்பு அவர், மராட்டிய துணை முதல்-மந்திரியாக பொறுப்பேற்று கொண்டார். அவருடன் எம்.எல்.ஏ.க்கள் சிலரும் சென்றனர்.

இதனால், தேசியவாத காங்கிரஸ் கட்சியில் குழப்பம் நீடித்து வருகிறது. அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சி தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.

இந்த நிலையில், அஜித் பவார் அணியினர் திடீரென, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை இன்று சந்திக்க சென்று உள்ளனர். அஜித் பவார் அணியை சேர்ந்த மூத்த தலைவர் பிரபுல் பட்டேல், ஜிதேந்திரா உள்ளிட்டோர் சென்று உள்ளனர். அவர்களுடன் ஹசன் முஷ்ரிப் மற்றும் திலீப் வல்சே பாட்டீல் ஆகியோரும் சென்று உள்ளனர்.

மும்பை நகரில் உள்ள ஒய்.பி. சவான் மையத்திற்கு சென்று அவர்கள் சரத்பவாரை சந்தித்து பேச உள்ளனர். இதேபோன்று, சரத் பவார் அணியில் ஜெயந்த் பாட்டீல் மற்றும் ஜிதேந்திரா ஆவாத் ஆகியோர் உடனே சென்று உள்ளனர்.

இதுபற்றி ஜெயந்த் பாட்டீல் கூறும்போது, சுப்ரியா சுலேவிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் ஒய்.பி. சவான் மையத்திற்கு விரைவாக வரும்படி என்னை கேட்டு கொண்டார்.

அஜித் பவார் மற்றும் பிற எம்.எல்.ஏ.க்கள் ஏன் வருகை தந்து உள்ளனர்? என எனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார். ஏக்நாத் ஷிண்டே அரசில் அஜித் பவார் இணைந்த நிலையில், மும்பையில் இந்த சந்திப்பு நடக்கிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்