எம்.பி. பதவி பறிப்புக்கு பின் ராகுல் காந்தி முதன்முறையாக வயநாடு பயணம்; பொது கூட்டம், பேரணி நடத்த திட்டம்

எம்.பி. பதவி தகுதி நீக்கத்திற்கு பின் ராகுல் காந்தி வயநாடு தொகுதிக்கு முதன்முறையாக நாளை பயணம் செய்ய உள்ளார்.

Update: 2023-04-10 05:34 GMT

புதுடெல்லி,

பிரதமர் மோடி பற்றி அவதூறாக பேசிய வழக்கு ஒன்றில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, மக்களவை செயலகம் அவரது எம்.பி. பதவியை அதிரடியாக பறித்தது.

இதன் தொடர்ச்சியாக, அரசு பங்களாவை காலி செய்ய கூறி, நோட்டீசும் அனுப்பப்பட்டது. எனினும், கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு கோர்ட்டு அனுமதி அளித்தது.

இதன்படி காங்கிரஸ் கட்சி மேல்முறையீடு செய்ய முடிவெடுத்து உள்ளது. இந்த சூழலில், அவருக்கு எதிராக அடுத்தடுத்து வழக்குகள் பதிவாகி வருகின்றன. அதனை எதிர்கொள்ளவும் அவர் தயாராகி வருகிறார்.

ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்புக்கு எதிராக காங்கிரஸ் கட்சிக்காரர்கள் நாடு முழுவதும் தீவிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத்திலும் கூட இந்த விசயம் எதிரொலித்தது. இதனால், அவை நடவடிக்கைகள் முடங்கின.

இந்த சூழலில், கேரளாவின் வயநாடு தொகுதியின் முன்னாள் எம்.பி.யான ராகுல் காந்தி முதன்முறையாக ஏப்ரல் 11-ந்தேதி (நாளை), எம்.பி. பதவி தகுதி நீக்கத்திற்கு பின்னர், வயநாடு தொகுதிக்கு பயணம் செய்ய உள்ளார்.

அவரது இந்த பயணத்தின்போது, பொது கூட்டம் ஒன்றில் கட்சி தொண்டர்கள் மற்றும் மக்களிடையே உரையாற்ற திட்டமிட்டு உள்ளார். சாலை வழி பேரணி செல்லவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்