மங்களூரு அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டது

மங்களூரு அருகே கங்கனாடியில் சரக்கு ரெயில் தடம் புரண்டது. நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் அந்த ரெயில் மீட்கப்பட்டது.

Update: 2022-07-23 14:40 GMT

மங்களூரு;

ரெயில் தடம் புரண்டது

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் உள்ள கங்கனாடி ரெயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் சரக்கு ரெயில் ஒன்று தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அந்த ரெயிலில் இருந்த 2 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது.

இதை அறிந்த என்ஜின் டிரைவர் சுதாரித்து கொண்டு உடனே நிறுத்திவிட்டார். இதனால் அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டனர்.

பின்னர் மீட்பு ரெயில் மூலம் ரெயில்வே குழுவினர் உதவியுடன் அந்த தடம் புரண்ட பெட்டிகளை மீட்கும் பணிகளில் ஈடுபட்டனர். இதற்காக பல மணி நேரம் அதிகாரிகள் போராடினர்.

ரெயில் பெட்டிகள் மீட்பு

இதையடுத்து நேற்று காலை அந்த ரெயில் பெட்டிகள் தண்டவாளத்தில் நிலைநிறுத்தப்பட்டது.. இந்த விபத்தால் அந்த பகுதியில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட ரெயிலை அதிகாரிகள் மங்களூரு ரெயில் நிலையத்திற்கு பத்திரமாக கொண்டு சென்றனர்.

இருப்பினும் ரெயில் புரண்டதற்கான உண்மையான காரணம் தெரியவில்லை. இது குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை அந்த இடத்தில் வழக்கம்போல ரெயில் போக்குவரத்து தொடங்கியது.

Tags:    

மேலும் செய்திகள்