மராட்டிய மாநகராட்சி தேர்தல்: மீண்டும் கைகோர்த்த சரத்பவார் - அஜித் பவார்
பிம்ப்ரி–சிஞ்ச்வட் மாநகராட்சி தேர்தலில் சரத்பவார் கட்சியும், அஜித் பவார் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன;
புனே
மராட்டிய மாநிலத்தில் அரசியல் களம் அடிக்கடி மாறி வருகிறது. அங்கு சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்டத்தில் பா.ஜ.க. மிகப் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. 2-வது கட்டமாக புனே, பிம்ப்ரி–சிஞ்ச்வட் உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு வரும் 15-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.
உள்ளாட்சித் தேர்தல் என்பதால், முதல் கட்டத் தேர்தலிலேயே தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பா.ஜ.க., ஷிண்டே சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தனித்தனியே போட்டியிட்டன.இதற்கிடையே, சரத்பவாரும் அஜித் பவாரும் உள்ளாட்சித் தேர்தலில் இணைந்து போட்டியிட திட்டமிட்டுள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு சரத்பவாரிடம் இருந்து அவரது மருமகன் அஜித் பவார் விலகி பா.ஜனதா கூட்டணியில் இணைந்தார். அவர் தற்போது பா.ஜனதா கூட்டணி அமைச்சரவையில் துணை முதலமைச்சராக உள்ளார். இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் அவர் மீண்டும் சரத்பவாருடன் கைகோர்த்துள்ளார்.
பிம்ப்ரி–சிஞ்ச்வட் மாநகராட்சி தேர்தலில் சரத்பவார் கட்சியும், அஜித் பவார் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இதை அஜித் பவார் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-“உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைத்ததன் மூலம் குடும்பம் ஒன்றுபட்டுள்ளது. பிம்ப்ரி–சிஞ்ச்வட் மாநகராட்சியில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. இதற்காக நான் ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபடுவேன்.
கட்சி தொண்டர்கள் கடினமாக உழைக்க வேண்டும். பொதுக் கூட்டங்களின் போது எந்தவிதமான சர்ச்சைக்குரிய கருத்துகளையும் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும். நாங்கள் வளர்ச்சிக்காக உழைப்பவர்கள். இந்த மாநகராட்சியை கடனில் தள்ள முயன்றவர்களை நாங்கள் ஓரம் கட்டுவோம்.”இவ்வாறு அஜித் பவார் கூறினார். பிம்ப்ரி–சிஞ்ச்வட் மாநகராட்சியில் மொத்தம் 227 வார்டுகள் உள்ளன. இதில் எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற விவரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.இதேபோல், புனே மாநகராட்சி தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சரத்பவார்–அஜித் பவார் கட்சிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.