மதமும், அரசியலும் வேறு வேறு; இரண்டையும் கலக்கக்கூடாது - சனாதன சர்ச்சை குறித்து மல்லிகார்ஜுன கார்கே கருத்து

மதமும், அரசியலும் வெவ்வேறானவை. இரண்டையும் கலக்கக்கூடாது என்று சனாதன சர்ச்சை குறித்து மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

Update: 2023-09-09 00:31 GMT

கோப்புப்படம்

ராய்ப்பூர்,

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று சத்தீஷ்கார் மாநிலத்துக்கு சென்றார்.

சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து அவரிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:-

யாருடைய மதம் பற்றியும் பேச நான் இங்கு வரவில்லை. ஏழைகளுக்கான நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ளேன்.

மதமும், அரசியலும் வெவ்வேறானவை. இரண்டையும் கலக்க வேண்டிய அவசியம் இல்லை. இதுபற்றி நான் விவாதிக்க விரும்பவில்லை என்று அவர் கூறினார்.

பெயர் மாற்றம்

முன்னதாக, ராஜ்நந்தகோன் மாவட்டம் தேக்வா கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில், மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டார்.

அதில் அவர் பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலுக்காக நாங்கள் 'இந்தியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்தோம். உடனே, நாட்டின் பெயர் 'பாரதம்' என்று மாற்றப்பட வேண்டும் என்று பா.ஜனதா சொல்கிறது.

இந்தியா, பாரதம் என்ற இரண்டுமே அரசியல் சட்டத்தில் இருக்கிறது. எனவே, ஏன் சர்ச்சையை உருவாக்க வேண்டும்?

பிளவுபடுத்த முயற்சி

பாரதம் என்ற வார்த்தையை காங்கிரஸ் வெறுப்பதாக பா.ஜனதா சொல்கிறது. நாங்கள் பாரதத்தை நேசிக்கிறோம்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடத்தப்பட்ட ராகுல்காந்தி பாதயாத்திரைக்கு 'பாரத ஒற்றுமை பயணம்' என்றுதான் பெயர் சூட்டப்பட்டது.

நாங்கள் பாரதத்தை ஒன்றுபடுத்த பாடுபடுகிறோம். பா.ஜனதாவோ, நாட்டை பிளவுபடுத்த முயற்சிக்கிறது.

'இந்தியா' என்ற வார்த்தை மீது வெறுப்பு இருந்தால், ஸ்டார்ட்அப் இந்தியா, ஸ்டாண்ட்அப் இந்தியா என்று திட்டங்களுக்கு பெயர் வைத்தது ஏன்? என்று அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்