எதிர்க்கட்சிகள் அமளி; மக்களவை 2 மணி வரை ஒத்தி வைப்பு

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-07-24 06:55 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. வருகிற ஆகஸ்டு 11-ந்தேதி வரை கூட்டத்தொடர் 21 அமர்வுகளாக நடைபெறும். கடந்த 2 நாட்களாக நடந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் சம்பவம் உள்ளிட்ட விவகாரங்களால் அமளி ஏற்பட்டு அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில், இன்று 3-வது நாள் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்றது. இந்த சூழலில், இரு அவைகளிலும் மணிப்பூர் வன்முறைக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மணிப்பூர் விவகாரம் பற்றி பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தின.

இதனால், நாடாளுமன்றத்தின் மேலவை மதியம் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. மணிப்பூர் விவகாரம் பற்றி நாடாளுமன்ற மக்களவையில் நண்பகல் 12 மணிக்கு விவாதம் நடத்தலாம் என சபாநாயகர் அறிவிப்பு வெளியிட்டார்.

இதுபற்றி மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் கூறும்போது, மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். அதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என கூறினார்.

இதனை தொடர்ந்து மக்களவை மீண்டும் மதியம் 12 மணியளவில் கூடியதும், மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. இதனால், மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்