தமிழக அமைச்சர் உதயநிதி கருத்துக்கு பதிலடி கொடுக்க உத்தரவு: பிரதமர் மோடிக்கு சித்தராமையா கடும் கண்டனம்
தமிழக அமைச்சர் உதயநிதி கருத்துக்கு பதிலடி கொடுக்க உத்தரவிட்டுள்ள பிரதமர் மோடிக்கு முதல்-மந்திரி சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:-
தகுந்த பதிலடி
தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் குறித்து கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
சனாதன தர்மம் குறித்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறிய கருத்துக்கு தகுந்த பதிலடி வழங்குமாறு மத்திய மந்திரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பிரதமர் மோடியின் இந்த செயல் வன்முறையை தூண்டிவிடும் வகையில் உள்ளது. இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. அதனால் மோடி தனது கருத்தை வாபஸ் பெற வேண்டும். விஷயங்கள் எதுவாக இருந்தாலும் சரி, தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.
மக்களை தூண்டிவிடும்
அதற்கு பதிலாக தக்க பதிலடி கொடுக்கு வேண்டும் என்று கூறுவது மக்களை தூண்டிவிடும் செயல் மட்டுமின்றி சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வது ஆகும். இதை பிரதமர் செய்தாலும் தவறே. மோடி பா.ஜனதா தலைவர் மட்டுமல்ல, அரசியல் சாசன பதவியான பிரதமர் பதவியில் அமர்ந்திருப்பவர். அவரது நடை, பேச்சு, செயல் கண்ணியமாக, பொறுப்பானதாக இருக்க வேண்டும். அது தான் ராஜதர்மம். தான் 140 கோடி மக்களுக்கு பிரதமர் என்பதை அவர் மறந்துவிட்டதாக தெரிகிறது.
பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று பா.ஜனதா தலைவர்கள் வன்முறைக்கு அழைப்பு விடுப்பது கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது. மோடியின் முந்தைய நடவடிக்கைகளை கவனித்தால், அவரது இன்றைய கருத்தில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. குஜராத் வன்முறையின்போது முதல்-மந்திரியாக இருந்த அவரது செயல்பாடுகள் குறித்து அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய் அதிருப்தி தெரிவித்தார். ராஜதர்மத்தை பின்பற்றும்படி அவருக்கு அறிவுறுத்தினார். வாஜ்பாய் கூறிய அந்த அறிவுரையையே நான் அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இவ்வாறு சித்தராயைா தெரிவித்துள்ளார்.