நமது பலம் பிறருக்கு வேதனை உண்டாக்க அல்ல; பலவீனம் வாய்ந்தவர்களை பாதுகாக்க: ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சு

வருங்காலத்தில் சூப்பர் பவர் கொண்ட நாடு இந்தியா என நாம் மட்டுமின்றி மொத்த உலகமும் கூறி வருகிறது என ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேசியுள்ளார்.

Update: 2023-04-19 02:17 GMT

ஜபல்பூர்,

மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, வருங்காலத்தில் சூப்பர் பவர் கொண்ட நாடாக இந்தியா உருமாறும் என நாம் மட்டுமின்றி ஒட்டு மொத்த உலகமும் கூறி வருகிறது என பேசியுள்ளார்.

இந்தியா விஷ்வகுருவாக (உலக தலைவராக) உருவாக இருக்கிறது. அந்த இலக்கை நாம் அடைய வேண்டும். நாம் யாரையும் வெற்றி கொள்ளவோ அல்லது எவரையும் மாற்றவோ போவதில்லை.

நாம் நேர்மையுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், முனிவர்களின் வழிகாட்டுதல்களை ஏற்று தர்மத்தின் வழியில் நாம் அனைவரும் நடக்க வேண்டும் என கூறியுள்ளார்.

நம்முடைய சக்தி மற்றவர்களுக்கு பிரச்சனைகளை உருவாக்குவதற்கோ, வலி ஏற்படுத்துவதற்கோ இருக்காது. அதற்கு மாறாக, அமைதியை உருவாக்கவும், பலவீனம் வாய்ந்தவர்களை பாதுகாப்பதற்காகவும் இருக்கும் என்று பேசியுள்ளார்.

உலக நாடுகள் தங்களை உயர்ந்தவர்கள் என நிலைநிறுத்தி கொள்ள போரில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, நாம் போரில் காயம் அடைந்தவர்களுக்கு தைலம் பூசினோம்.

நம்முடைய ரிஷிகள் உண்மையில் சமூகத்திற்கு அதிகம் சேவையாற்றி உள்ளனர். சனாதன தர்மம் என்பதே இந்து ராஷ்டிரம் மற்றும் இந்து பாரம்பரியம். அதனாலேயே வருகிற நாட்களில் இந்தியா சூப்பர் பவர் நாடாக மாற உள்ளது. ஆனால், அதற்கான பலம் இன்றி அது சாத்தியம் இல்லை என அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்