மத்திய ஆயுத படைகளில் 1.14 லட்சம் காலியிடங்கள்: மாநிலங்களவையில் மத்திய மந்திரி தகவல்

மத்திய ஆயுத படைகள் மற்றும் டெல்லி போலீசில் 1 லட்சத்து 14 ஆயிரம் காலியிடங்கள் இருப்பதாக மாநிலங்களவையில் மத்திய மந்திரி கூறினார்.

Update: 2023-08-02 21:51 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

மாநிலங்களவை கேள்வி நேரத்தில் மத்திய உள்துறை இணை மந்திரி அஜய்குமார் மிஸ்ரா கூறியதாவது:-

மத்திய உள்துறை அமைச்சம் மற்றும் அதன்கீழ் உள்ள சி.ஆர்.பி.எப். உள்ளிட்ட மத்திய ஆயுத படைகள், டெல்லி போலீஸ் ஆகியவற்றில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 245 காலியிடங்கள் உள்ளன. இந்த ஆண்டு, 31 ஆயிரத்து 879 பணியிடங்களுக்கு விளம்பரம் வெளியிடப்பட்டது. அவற்றில், 1,126 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

மணிப்பூர் குழந்தைகள் பள்ளியில் சேர்ப்பு

மாநிலங்களவை கேள்வி நேரத்தில் மத்திய கல்வித்துறை இணை மந்திரி அன்னபூர்ணா தேவி கூறியதாவது:-

மணிப்பூரில் கலவரம் காரணமாக 14 ஆயிரத்து 763 பள்ளி குழந்தைகள், வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களை பள்ளியில் சேர்க்க ஒவ்வொரு நிவாரண முகாமிலும் ஒரு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டார்.

அதன் பலனாக, 93.5 சதவீத குழந்தைகள், அருகில் உள்ள பள்ளிகளில் இலவசமாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

நலிந்த மாணவர்கள்

மற்றொரு கேள்விக்கு அன்னபூர்ணா தேவி கூறியதாவது:-

கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, பொருளாதாரரீதியாக நலிந்த பிரிவினருக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. 2018-2019 கல்வி ஆண்டில் இருந்து 2022-2023 கல்வி ஆண்டு வரை பொருளாதாரரீதியாக பின்தங்கிய பிரிவினரை சேர்ந்த 2 கோடியே 27 லட்சத்து 72 ஆயிரம் மாணவர்கள், தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக, மத்தியபிரதேசத்தில் 53 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்