மத்திய கல்வி நிறுவனங்களில் 58 ஆயிரம் காலி பணியிடங்கள்: நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி தகவல்

மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் 58 ஆயிரம் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத காலி பணியிடங்கள் இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி தெரிவித்தார்.

Update: 2023-02-06 21:47 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது ஒரு கேள்விக்கு மத்திய கல்வித்துறை இணை மந்திரி சுபாஷ் சர்கார், பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-

கேந்திரிய வித்யாலயா, நவோதயா பள்ளிகள் மற்றும் மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் மொத்தம் 58 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத காலி பணியிடங்கள் உள்ளன.

இவற்றில், கேந்திரிய வித்யாலயாவில் மட்டும் 12 ஆயிரத்து 99 ஆசிரியர் இடங்களும், 1,312 ஆசிரியர் அல்லாத இடங்களும் காலியாக உள்ளன.

உயர்கல்வி நிறுவனங்களை பொறுத்தவரை, மத்திய பல்கலைக்கழகங்களில், 6 ஆயிரத்து 180 ஆசிரியர் இடங்களும், 15 ஆயிரத்து 798 ஆசிரியர் அல்லாத இடங்களும் காலியாக உள்ளன.

ஐ.ஐ.டி.

ஐ.ஐ.டி.களில் 4 ஆயிரத்து 423 ஆசிரியர் காலியிடங்களும், 5 ஆயிரத்து 52 ஆசிரியர் அல்லாத காலியிடங்களும் உள்ளன. இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்களில் 1,050 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத காலியிடங்கள் உள்ளன.

இந்த காலியிடங்களை நிரப்ப அந்தந்த கல்வி நிறுவனங்கள் விதிமுறைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுத்து வருகின்றன என்று அவர் கூறினார்.

உயர்கல்விக்காக வெளிநாடு பயணம்

மற்றொரு கேள்விக்கு சுபாஷ் சர்கார் அளித்த பதில் வருமாறு:-

கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து 2022-ம் ஆண்டுவரை உயர்கல்வி படிக்க 30 லட்சத்துக்கு மேற்பட்ட இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். 2022-ம் ஆண்டு மட்டும் 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் ெசன்றுள்ளனர்.

இந்தியாவில், சர்வதேச பல்கலைக்கழகம் அமைக்கும் திட்டம் இல்லை. அதே சமயத்தில், இந்தியாவில், வெளிநாட்டு உயர்கல்வி நிறுவன வளாகங்கள் அமைப்பதற்கான வரைவு மசோதா, பொதுமக்களின் கருத்து கேட்புக்காக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

கங்கை நீர், குடிப்பதற்கு அல்ல

மாநிலங்களவை கேள்வி நேரத்தில் ஒரு கேள்விக்கு மத்திய ஜல்சக்தி துறை இணை மந்திரி பிஷ்வேஸ்வர் துடு அளித்த பதில் வருமாறு:-

கங்கையை சுத்தப்படுத்தும் திட்டத்துக்கு 2014-ம் ஆண்டில் இருந்து இதுவரை ரூ.13 ஆயிரத்து 709 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அந்த திட்டத்தின் நோக்கம், கங்கை நீரை குடிப்பதற்காக பயன்படுத்துவது அல்ல. வெளியிடங்களில் குளிப்பதற்காக பயன்படுத்துவதே நோக்கம் என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்