'பிஎம் கேர்ஸ்' தொண்டு அறக்கட்டளை, இந்திய அரசால் கட்டுப்படுத்தப்படவில்லை - மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

பிஎம் கேர்ஸ் பொது தொண்டு நிறுவனம் என்றும், இந்திய அரசால் கட்டுப்படுத்தப்படவில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2023-01-31 13:13 GMT

டெல்லி,

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்த நேரத்தில் 2020 மார்ச் மாதம் 'பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால நிதி' அல்லது 'பிஎம் கேர்ஸ்' என்ற பெயரில் இணையதளத்தை பிரதமர் மோடி தொடங்கினார். இந்த இணையதளம் மூலம் மக்கள் நன்கொடையாக நிதி வழங்கலாம் என்று பிரதமர் மோடி அறிவித்தார். இந்திய அரசின் முத்திரை, இந்திய அரசின் இணையதள பக்க (டொமெயின்) முடிவுகளை (pmcares.gov.in) கொண்ட இந்த இணையதளம் மூலம் மக்கள் நன்கொடை அளித்து வருகின்றனர்.

இதனிடையே, பிஎம் கேர்ஸ் நிதிக்கு வழங்கப்பட்டு வரும் நன்கொடை விவரம், கையிருப்பு நிதி, செலவழிக்கப்பட்ட நிதி உள்ளிட்ட விவரங்களை பொதுவெளியில் வெளியிட வேண்டும் எனவும், பிஎம் கேர்ஸ் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பொது அதிகாரத்திற்கு உட்பட்டது எனவும், பிஎம் கேர்ஸ் நிதி விவகாரங்கள் சுதந்திரமாக கையாளப்படுவதை உறுதி செய்ய அதை அரசியலமைப்பின்படி அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் உத்தரவிடும்படி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு குறித்து மத்திய அரசு இன்று அளித்த பதில் பின்வருமாறு:-

பிஎம் கேர்ஸ் நிதி செயல்பாடுகளை மத்திய அரசோ அல்லது மாநில அரசோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கட்டுப்படுத்தவில்லை. பிஎம் கேர்ஸ் பிஎம் கேர்ஸ் பொது தொண்டு அறக்கட்டளையாகும். இது இந்திய அரசியல் அமைப்பாலோ, மத்திய மாநில அரசு சட்டங்களாலோ உருவாக்கப்படவில்லை.

பிஎம் கேர்ஸ் பொது அறக்கட்டளை என்பதால் அது தகவலறியும் உரிமை சட்டத்திற்கான பொது அதிகாரத்தின் கீழ் வராது. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால் பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து வழங்கப்படும் நிதி எவ்வாறு பகிர்ந்து வழங்கப்பட வேண்டும் என்ற எந்த வித வழிமுறைகளும் இல்லை.

பிற தனியார் தொண்டு நிறுவனங்களை போல பிஎம் கேர்ஸ் தொண்டு அமைப்புக்கு நன்கொடை அளிப்பவர்களுக்கும் வருமான வரியில் விலக்கு அளிக்கப்படுகிறது. மத்திய அரசின் பிரதம மந்திரியின் தேசிய நிவாரண நிதி (Prime Minister's National Relief Fund) இணையதளத்தில் பயன்படுத்தப்படுவது போல பிஎம் கேர்ஸ் நிதி (PM CARES Fund) இணையதளத்திலும் இந்திய அரசின் முத்திரை, இந்திய அரசின் இணையதள பக்க (டொமெயின்) முடிவுகளை (.gov.in) பயன்படுத்தப்படுகிறது.

இந்த தொண்டு நிறுவனம் இந்திய அரசியலமைப்பிற்கு கீழ் இல்லாதாதாலும், பொது சொத்து இல்லை என்பதாலும் 3-ம் தரப்பின் விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியிட முடியாது என்று மத்திய அரசு கோர்ட்டில் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்