தனியார் நிறுவன ஊழியருக்கு கத்திக்குத்து; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
தார்வாரில், கத்தியால் குத்தி தனியார் நிறுவன ஊழியரை கொல்ல முயன்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
உப்பள்ளி;
தனியார் நிறுவன ஊழியர்
ஹாவேரியை சேர்ந்தவர் நவீன் தொட்டமணி(வயது 30). இவர், தார்வார் டவுனில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வேலைமுடிந்து நவீன் தொட்டமணி ஹாவேரிக்கு பஸ்சில் செல்ல பஸ் நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்மநபர்கள், நவீனை காரில் கடத்தி சென்று தார்வார் தாலுகா நுக்கேரி பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
பின்னர் அங்கு வைத்து மர்மநபர்கள், நவீன் தொட்டமணியை தாக்கி கழுத்தில் கத்தியால் குத்தினர். இதில் பலத்த கத்திக்குத்து காயமடைந்த நவீன்தொட்டமணி ஓடிக்கொண்டே காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளார். இந்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வந்ததாக தெரிகிறது. இதையறிந்த மர்மநபர்கள், காரில் ஏறி தப்பிச் சென்றுவிட்டனர்.
வலைவீச்சு
இதையடுத்து அப்பகுதி மக்கள், நவீன் தொட்டமணியை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக உப்பள்ளி கிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தார்வார் புறநகர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ஆனால் நவீன் தொட்டமணியை கொல்ல முயன்ற மர்மநபர்கள், என்ன காரணத்திற்காக கொல்ல முயன்றனர் என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து தார்வார் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.