அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு தடை; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு

கர்நாடகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தடை விதித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-03-23 21:38 GMT

பெங்களூரு:

பொதுநல மனு

கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்கம், சம்பள உயர்வை வலியுறுத்தி 21-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தது. இதையடுத்து மாநில அரசு 15 சதவீத சம்பள உயர்வு வழங்குவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து அந்த ஊழியர்கள் சங்க நிர்வாகிகளுடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து, ஊழியர்கள் சங்கம் வேலை நிறுத்த போராட்ட முடிவை வாபஸ் பெற்றது.

இந்த நிலையில் அரசு போக்குவரத்து ஊழியர் சங்கங்களில், சாரிகே நிகமகல சமான மனுசகர வேதிகே (அரசு போக்குவரத்து கழகங்களின் ஒரே கருத்து உடைய ஊழியர்கள் சங்கம்), சம்பள உயர்வு கோரி 24-ந் தேதி (இன்று) முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தது. இதை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

வேலை நிறுத்தத்திற்கு தடை

அந்த மனு தலைமை நீதிபதி பி.பி.வரலே, நீதிபதி அசோக் கினகி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டனர். தற்போது பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வு மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெறுவதால் 3 வார காலத்திற்கு வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்