ராஜ்கோட் தீ விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் நிவாரணம்

ராஜ்கோட் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என குஜராத் முதல் அமைச்சர் பூபேந்திர பட்டேல் அறிவித்துள்ளார்.

Update: 2024-05-26 08:53 GMT

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் டிஆர்பி என்ற பெயரில் விளையாட்டு திடல் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த விளையாட்டு மைதானம் இரண்டடுக்குகளை கொண்டது. தற்காலிக இரும்பு சட்டங்களை கொண்டு இந்த விளையாட்டு மைதானத்தை இதன் நிறுவனர்கள் உருவாக்கியுள்ளனர். இதன் காரணமாக அவ்வப்போது அதில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

அந்த மையத்தின் அருகிலேயே மேம்பாட்டு பணிக்காக வெல்டிங் வைக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக தீப்பொறி பட்டு அங்கிருந்த பொருட்கள் எரியத் துவங்கியுள்ளது. சற்று நேரத்தில் மொத்த மையமும் தீப்பற்றி எரிந்ததில், உள்ளே சிக்கிக்கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.

இருப்பினும் பலர் தீயில் சிக்கிக் கொண்டதால், உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இன்று காலை வரை 33 பேர் இந்த விபத்தில் உயிரிழந்திருப்பதாகவும், அதில் 9 பேர் குழந்தைகள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என முதல் அமைச்சர் பூபேந்திர பட்டேல் அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்