மேற்கு வங்காளத்தில் 'ராமெல் புயல்' எதிரொலி: 394 விமானங்களின் சேவை ரத்து

ராமெல் புயல் எதிரொலியால் மேற்கு வங்காள கடலோர மாவட்டங்களை சேர்ந்த 1 லட்சம் பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

Update: 2024-05-26 20:48 GMT

கொல்கத்தா,

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக வலுபெற்றத்தை அடுத்து அதற்கு 'ராமெல்' என பெயரிட்டு இந்திய வானிலை ஆய்வு மையம் அதனை தீவிரமாக கண்காணித்து வந்தது. இந்தநிலையில் மேற்கு வங்காள மாநிலம் சாகர் தீவுகளுக்கும், வங்காளதேசத்தின் கெபுபாராவுக்கும் இடையே மணிக்கு 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் நள்ளிரவில் புயல் கரையை கடக்கக்கூடும் என எச்சரித்தது.

புயல் காரணமாக மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானக்கள் கொல்கத்தா, புர்பா மெதினிபூர், ஹவுரா, ஹூக்ளி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் நேற்று விடிய, விடிய கனமழை வெளுத்து வாங்கியது.

இந்தநிலையில் மேற்கு வங்காளம், ஒடிசா, திரிபுரா உள்ளிட்ட மாவட்டங்கள் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டன. குறிப்பாக மேற்கு வங்காளத்தில் தேசிய பாதுகாப்பு பேரிடர் மீட்புக்குழுவினர் களம் இறக்கப்பட்டனர். மாநில போலீசார் சார்பில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பேரிடர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

இந்திய கடலோர காவல்படையினரும் கொல்கத்தா, ஒடிசா மாநிலங்களில் உள்ள முக்கிய துறைமுகங்களான பாரதீப், ஹால்டியா உள்ளிட்டவற்றில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். இதற்காக சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டு புயல் கரையை கடக்கும் வரை கண்காணித்தனர். கொல்கத்தா சர்வதேச விமான நிலையம், ரெயில் நிலையங்கள், துறைமுகங்கள் உள்ளிட்டவற்றில் சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டன.

தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கானக்கள் மாவட்டங்களில் ரெயில் சேவை இன்று காலை 9 மணி வரை நிறுத்தப்பட்டன. கொல்கத்தா விமான நிலையத்தில் நேற்று மதியம் முதல் இன்று காலை 9 மணி வரை விமான சேவை முடங்கியது. இதனால் உள்ளூர் மற்றும் சர்வதேச வழித்தடங்களில் இயக்கப்பட வேண்டிய 394 விமானங்கள் சேவை ரத்தாகின. விமான பயணங்கள் மேற்கொள்ள வந்த பொதுமக்கள் விமான நிலையத்திலேயே தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

முன்னதாக கனமழை காரணமாக விமானநிலைய ஓடுபாதையில் மழைநீர் தேங்கி இருந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது.

மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டு கடலோரங்களில் வசித்து வந்த மீனவர்கள், பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். அந்த வகையில் மேற்கு வங்க கடலோர மாவட்ட பகுதிகளை சேர்ந்த 1 லட்சம் பேர் பாதுகாப்பு முகாம்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் உள்ளிட்டவற்றை மாநில அரசு செய்து வருகிறது. மேலும் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்