டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான தரவுகளை பொதுவெளியில் வெளியிட தயாரா? - பிரதமருக்கு ப.சிதம்பரம் கேள்வி

ஒரு துறையில் மட்டும் 6 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன என்றால், 2014-2019-ல் உருவாக்கப்பட்ட மொத்த வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை என்ன என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2024-05-23 07:19 GMT

புதுடெல்லி,

பிரபல தனியார் நாளிதழுக்கு பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரையிலான காலத்தில் டிஜிட்டல் பொருளாதாரம் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை விட 2.4 மடங்கு வேகமாக வளர்ந்து 6 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தெரிவித்திருந்தார். இது தொடர்பான தரவுகளை பொதுவெளியில் பிரதமர் வெளியிடுவாரா என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

2014 முதல் 2019 வரையிலான காலத்தில் டிஜிட்டல் பொருளாதாரம் ஒட்டுமொத்த பொருளாதாரத்தை விட 2.4 மடங்கு வேகமாக வளர்ந்து 6 கோடி வேலைகளை உருவாக்கியது என்று தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் கூறினார். பிரதமர் ஒரு அறிக்கையை வெளியிட்டால், அந்த அறிக்கை தொடர்பான தரவு அவரிடம் இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அது தொடர்பாக சில கேள்விகள்:

1. டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான தரவு மற்றும் தரவுகளின் ஆதாரத்தை பொதுவெளியில் வெளியிடுவீர்களா?

2. ஏன் 2019 உடன் நிறுத்திவிட்டீர்கள்? 2019 முதல் 2024 வரை என்ன நடந்தது?

3. ஒரு துறையில் மட்டும் 6 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன என்றால், 2014-2019-ல் உருவாக்கப்பட்ட மொத்த வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை என்ன?

4. படித்த இளைஞர்களின் வேலையின்மை விகிதம் ஏன் 42 சதவிகிதமாக இருக்கிறது? டிஜிட்டல் பொருளாதாரம் அவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கவில்லையா?

5. 2024-ம் ஆண்டு ஐஐடியில் இருந்து வெளிவந்த 38 சதவிகித பட்டதாரிகள் ஏன் இன்னும் வேலை கிடைக்காமல் இருக்கிறார்கள்? டிஜிட்டல் பொருளாதாரத்தால் ஐஐடி பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுகிறார்களா?" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்