குடியரசு தின ரெய்டு: பாகிஸ்தானிடம் இருந்து ஆயுத சப்ளை, செயலி வழி தொடர்பு; அதிர்ச்சி தகவல்

குடியரசு தின ரெய்டில் பாகிஸ்தானிடம் இருந்து ஆயுத சப்ளை மற்றும் செயலி வழியே பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது.

Update: 2023-01-17 07:09 GMT



புதுடெல்லி,


நாட்டில் வருகிற 26-ந்தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், டெல்லியில் போலீசார் தீவிர சோதனை நடத்தி, சந்தேகத்திற்குரிய வாகனங்களை நிறுத்தி, ஆய்வு செய்தும், பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். ராணுவ வீரர்களின் பாதுகாப்பு ஒத்திகையும் நடந்து வருகிறது.

இந்த நிலையில், டெல்லி போலீசார் நடத்திய ரெய்டில் ஜெகஜீத் சிங் என்ற ஜக்கா மற்றும் நவுசத் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். பல்ஸ்வா பால் பண்ணை பகுதியருகே பதுங்கி இருந்த அவர்களை கடந்த வாரம் பிடித்து விசாரித்ததில் அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன.

அவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் உள்ள தொடர்பும், பல குற்ற செயல்களில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் அளித்த தகவலின் பேரில், டெல்லியின் வடக்கு பகுதியான பல்ஸ்வா பகுதியில் காலி மனையில் சோதனையிட்டதில் உடல் ஒன்றை கைப்பற்றினர்.

கழிவுநீர் ஓடையில் வீசப்பட்ட, அடையாளம் தெரியாத, 3 துண்டுகளாக இருந்த உடல் ஒன்றை போலீசார் மீட்டு உள்ளனர். அவரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது என போலீசார் கூறியுள்ளனர்.

அவர்கள் இருவரும் தங்கியுள்ள வாடகை கட்டிடத்தில் இருந்து 2 கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன. 3 கைத்துப்பாக்கிகள், 22 வெடிக்க தயாரான நிலையிலுள்ள தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜக்காவுக்கு கனடாவை சேர்ந்த காலிஸ்தானி பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளது என சந்தேகிக்கப்படுகிறது. ஹர்கத்-உல்-அன்சார் என்ற பயங்கரவாத அமைப்புடன் நவுசத்துக்கு தொடர்பு உள்ளது என போலீசார் கூறியுள்ளனர்.

இவர்கள் பல்வேறு மாநிலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததும் தெரிய வந்து உள்ளது. தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தியதில், பல முக்கிய தகவல்கள் கிடைத்து உள்ளன. இந்த பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய வேறு 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

இவர்களுக்கு பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்களை கீழே போட்டு விட்டு செல்லும் ஆளில்லா விமானம் வழியே ஆயுத சப்ளை நடந்து உள்ளது. தொடர்ந்து, அந்நாட்டு பயங்கரவாதிகளுடன் இவர்கள் தொடர்பில் இருந்து உள்ளனர்.

இதற்காக சமூக ஊடகம் வழியே சிக்னல் என்ற செயலியை பயன்படுத்தி வந்துள்ளனர். உத்தரகாண்டின் அடையாளம் கண்டறியப்படாத இடத்தில் இருந்து ஆயுதங்களை பெற்று வந்ததும் தெரிய வந்து உள்ளது. அதுபற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என டெல்லி போலீசின் சிறப்பு படை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்