50 சதவீத விமானங்களை மட்டுமே இயக்கலாம்- ஸ்பைஸ் ஜெட் மீதான கட்டுப்பாடுகளை நீட்டித்து டிஜிசிஏ உத்தரவு

ஸ்பைஸ் ஜெட் 50 சதவீத விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும் என டிஜிசிஏ ஜூலை 27ல் உத்தரவிட்டு இருந்தது.

Update: 2022-09-21 16:12 GMT

Image Courtesy: PTI 

புதுடெல்லி,

ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் அக்டோபர் 29 தேதி வரை 50 சதவீத விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும் என விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்பைஸ் ஜெட் நிறுவன விமானங்கள் அண்மை காலமாக தொடர்ந்து தொழில் நுட்ப கோளாறுகளுக்கு உள்ளாகி வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன் நடுவானில் ஏற்படும் கோளாறுகள் காரணமாக ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் பலமுறை பாதியில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தன.

இதை தொடர்ந்து டிஜிசிஏ ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அளித்த பதிலின் அடிப்படையில், அடுத்த எட்டு வாரங்களுக்கு 50 சதவீத விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும் என ஜூலை 27ல் டிஜிசிஏ உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில், விமான போக்குவரத்து இயக்குனரகம் தற்போது இந்த கட்டுபாடுகளை அக்டோபர் 29 வரை நீட்டித்துள்ளது. நிர்ணயித்த அளவுக்கு மேல் கூடுதல் எண்ணிக்கையிலான விமானங்களை இயக்க விரும்பினால் விமான போக்குவரத்து இயக்குனரகத்துக்கு திருப்தி அளிக்கும் வகையில் போதுமான பாதுகாப்பு இயக்கத்துக்கான நிதி வள ஆதாரத்தை காண்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்