தர்கா மீது அம்பு எய்வது போல் சைகை காட்டிய பெண் மீது வழக்குப்பதிவு
மச்சே கிராமத்தில் இந்து அமைப்பினர் சார்பாக ஊர்வலம் நடத்தப்பட்டது.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் மச்சே கிராமத்தில் இந்து அமைப்பினர் சார்பாக ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அந்த ஊர்வலம் அன்சரி தர்கா அருகே வந்தபோது, ஒரு வாகனத்தில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் தனது கைகளால் தர்கா மீது அம்பு எய்வதுபோல் சைகை செய்தார்.
இதுகுறித்த வீடியோவும் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த அப்துல் காதர் என்பவர், மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக ஊர்வலத்தில் கலந்து கொண்ட பெண் செயல்பட்டதாக கூறி பெலகாவி போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் விசாரித்த போலீசார், ஊர்வலத்தை தலைமை ஏற்று நடத்திய சுப்ரீத், ஸ்ரீகாந்த், பெட்டப்பா, கங்காராம், சிவாஜி, கல்லப்பா மற்றும் அம்பு ஏய்வதுபோல் சைகை காட்டிய பெண் ஹர்ஷிதா ஆகிய 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.