இலவச பஸ் பயண திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு: நூதன போராட்டம் நடத்திய ஆட்டோ டிரைவர்கள்

தெலுங்கானா மாநிலத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் திட்டத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஆட்டோ ஓட்டுநர்கள் பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-01-06 10:55 GMT

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலத்தில் அண்மையில் முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல் மந்திரியாக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரேவந்த் ரெட்டி பதவியேற்றார். பதவியேற்றதும் தேர்தல் வாக்குறுதியாக அளித்த அனைத்து பெண்களுக்கும் அரசு பஸ்களில் இலவச பயணம் திட்டத்தை செயல்படுத்தியது. இந்த திட்டம் மூலம் சொகுசு பேருந்துகள் தவிர அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அனைத்து பேருந்துகளிலும் பெண்கள், குழந்தைகள் ஆகியோர் இலவசமாக பயணிக்கலாம்.

இந்த திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து பல லட்சக்கணக்கான பெண்கள் நாள்தோறும் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தால் அங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆட்டோக்களை தேடுவோர் மிகவும் குறைவான அளவிலேயே உள்ளனர். பெரும்பாலானவர்கள் பேருந்துகளிலேயே பயணிக்க தொடங்கி விட்டனர். இதனால் வாழ்வாதாரம் இழந்த ஆட்டோ ஓட்டுநர்கள் அரசைக் கண்டித்து நேற்று பிச்சை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களின் வாழ்வாதாரத்தை காக்க அரசு புதிய திட்டத்தை செயல்படுத்த முன்வர வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



Tags:    

மேலும் செய்திகள்