கல்லூரி மாணவர் மீது தெலுங்கானா பா.ஜ.க. தலைவரின் மகன் கடுமையான தாக்குதல்; வைரலான வீடியோ

தெலுங்கானா பா.ஜ.க. தலைவரின் மகன், கல்லூரி மாணவரை மிரட்டி, அடித்த வீடியோ வைரலாகி வருகிறது.

Update: 2023-01-18 07:33 GMT



ஐதராபாத்,


தெலுங்கானாவில் பாரதீய ராஷ்டீரிய சமிதி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், பா.ஜ.க. மாநில தலைவர் மற்றும் எம்.பி.யாக பண்டி சஞ்சய் என்பவர் இருந்து வருகிறார். இவரது மகன் பண்டி சாய் பாகீரத் என்பவர் கல்லூரி மாணவரை மிரட்டி, அடிக்கும் காட்சிகள் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

பாகீரத், மேலாண் படிப்பை படித்து வரும் நிலையில், மகிந்திரா பல்கலை கழகத்தின் வளாகத்தில் மற்றும் விடுதி அறையில் என இரு இடங்களில் மாணவரை தாக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளிவந்து உள்ளன.

இதனை தொடர்ந்து, பாகீரத் மற்றும் மற்றொரு நபர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி துண்டிகல் காவல் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, எம்.பி.யின் மகன் பண்டி சாய் பாகீரத், மாணவர் ஒருவரை அடித்து, துன்புறுத்தியதற்காக அவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கல்லூரி நிர்வாகத்தினரின் சார்பில் அளித்த புகாரின்பேரில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவர், தெலுங்கானா பா.ஜ.க. தலைவர் பண்டி சஞ்சயின் மகன். இதுபற்றி நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம். அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என கூறியுள்ளார்.

அந்த வீடியோவில், ஸ்ரீராம் என்ற மாணவர், பாகீரத்தின் நண்பரின் சகோதரியுடன் நெருங்கி பழகியுள்ளார் என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமுற்ற பாகீரத் அந்த மாணவரை தகாத வார்த்தைகளால் திட்டி, கன்னத்தில் அறைந்து உள்ளார்.

இதுபற்றிய வீடியோவை ஆளும் பாரதீய ராஷ்டீரிய சமிதி கட்சியினர் பகிர்ந்து உள்ளனர். பாகீரத்துக்கும், தனக்கும் எந்த மோதலும் இல்லை என்று பாதிக்கப்பட்ட மாணவர் கூறியுள்ளார். அவர் புகார் எதுவும் அளிக்கவில்லை. எனினும், சம்பவம் பற்றி பல்கலை கழகத்தின் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்