ஆந்திராவில் தெலுங்கு தேசம்-ஜனசேனா கூட்டணி: நடிகர் பவன் கல்யாண் அறிவிப்பு

அடுத்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியும், ஜனசேனாவும் இணைந்து போட்டியிடும் என பவன் கல்யாண் கூறினார்.

Update: 2023-09-15 01:57 GMT

ராஜமுந்திரி,

ஆந்திராவில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை, நடிகரும், ஜனசேனா கட்சித்தலைவருமான பவன் கல்யாண் நேற்று சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆந்திராவில் அடுத்த தேர்தல்களில் தெலுங்கு தேசம் கட்சியுடன் தனது கட்சி இணைந்து போட்டியிடும் என தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், 'ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு எதிரான வாக்குகள் பிளவுபடாமல் பார்த்துக் கொள்வதே எனது நோக்கம். அதனால் அடுத்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியும், ஜனசேனாவும் இணைந்து போட்டியிடும்' என்று தெரிவித்தார்.

தான் தற்போது பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பதாக தெளிவுபடுத்திய பவன் கல்யாண், ஆந்திராவில் நிலவும் மோசமான அரசியல் சூழ்நிலையையும், அராஜகத்தையும் புரிந்து கொண்டு பா.ஜனதா எங்களுடன் இணைய முடியும் என்று உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்தார்.

சந்திரபாபு நாயுடு அரசியல் தலைவர் எனவும், முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி ஒரு பொருளாதார குற்றவாளி என்றும் சாடிய அவர், சிறையில் சந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்பு குறித்த கவலைகளை பிரதமர் மோடியிடம் தெரிவிப்பேன் என்றும் கூறினார்.

பவன் கல்யாணுடன் தெலுங்கு தேசம் தேசிய பொதுச்செயலாளர் நரலோகேஷ், பாலகிருஷ்ணா எம்.எல்.ஏ. ஆகியோரும் உடனிருந்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்