முழு அடைப்பு போராட்டம் அமைதியான முறையில் நடத்த வேண்டும்

மைசூருவில் முழுஅடைப்பு போராட்டத்தை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என்று விவசாய சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2023-09-28 18:45 GMT

மைசூரு

இன்று முழுஅடைப்பு

கர்நாடகம் முழுவதும் இன்று (வௌ்ளிக்கிழமை) முழுஅடைப்பு போராட்டம் நடக்கிறது. இந்தநிலையில் மைசூரு நகர விவசாய சங்க தலைவர் பிரசன்னா நிருபர்களிடம் கூறுகையில், மைசூரு மாவட்டத்தில் இன்று நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்திற்கு வியாபாரிகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் ஒத்துழைப்பு தர வேண்டும்.

இதில் மவுன ஊர்வலம் நடக்கிறது. அப்போது பொதுமக்களுக்கு எந்தவொரு தொந்தரவும் ஏற்படக்கூடாது. மேலும் அரசு பஸ், வாகனங்கள் உள்ளிட்ட பொது சொத்துக்களை யாரும் சேதப்படுத்த கூடாது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யாததால் அணைகளில் நீர் நிரம்பவில்லை. இதனால் மாநிலத்தில் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இந்த நிலைமையிலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இனிமேல் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட கூடாது. இதனை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

ஆதரவு

மைசூரு டவுனில் உள்ள அனைத்து சாலைகளிலும் போராட்டம் நடத்தப்படுகிறது. இதனால் அவசர, அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற வாகனங்கள் மைசூரு நகரத்திற்கு வர வேண்டாம்.

அதாவது மருத்துவ கடைகள், பால் விற்பனை நிலையம் போன்ற அத்தியாவசிய கடைகள் திறக்கப்பட்டு இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இந்த போராட்டத்திற்கு மைசூரு மாவட்ட கன்னட சங்கங்கள், விவசாய சங்கத்தினர், வக்கீல்கள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்