அரசியல் சாசனத்தின் விருப்பங்கள் முழுமையாக நிறைவேறவில்லை முதல்-மந்திரி சித்தராமையா பேச்சு

அரசியல் சாசனத்தின் விருப்பங்கள் முழுமையாக நிறைவேறவில்லை என முதல்-மந்திரி சித்தராமையா பேசினார்.

Update: 2023-08-31 18:45 GMT

பெங்களூரு-

அரசியல் சாசனத்தின் விருப்பங்கள் இன்னும் முழுமையாக நிறைவேறவில்லை என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.

அரசியல் சாசனம்

கர்நாடக தலித் சங்கர்ஷ சமிதி சார்பில் தேவராஜ் அர்ஸ் ஜெயந்தி விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு, விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-

அரசியல் சாசன குழுவுக்கு அம்பேத்கர் தலைமை வகிக்காமல் இருந்து இருந்தால், இத்தகைய அரசியல் சாசனம் நமக்கு கிடைத்திருக்காது. அம்பேத்கர் மற்றும் அரசியல் சாசனத்தின் விருப்பங்களை தேவராஜ் அா்ஸ் நிறைவேற்றினார். அவர் சமூக நீதி கோட்பாடுகளை பின்பற்றி ஆட்சியை நடத்தினார். அவர், உழுபவரே நில உரிமையாளர் என்ற சட்டத்தை கொண்டு வந்து புரட்சியை ஏற்படுத்தினார். ஆனால் முந்தைய பா.ஜனதா ஆட்சியாளர்கள், உள்ளவரே (பணக்காரர்) நில உரிமையாளர் என்று அந்த சட்டத்தை மாற்றிவிட்டனர்.

ஆட்சி அதிகாரம்

அரசியல் சாசன விரோதிகள், ஏழை, நடுத்தர வர்க்கத்தினருக்கு எதிரானவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுத்தால் சமூக நீதியை சீரழித்துவிடுவார்கள். தேவராஜ் அர்ஸ், ஹாவனூர் குழுவை அமைத்து பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை ஏற்படுத்தி கொடுத்தார். அவர் துணிச்சலாக செயல்பட்டு அந்த அறிக்கையை அமல்படுத்தினார். எதிர்ப்புகளை அவர் பொருட்படுத்தவில்லை.

ஆட்சி அதிகாரத்தை யாருக்கு வழங்க வேண்டும் என்ற தெளிவை தலித் மற்றும் சூத்திர மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் சாசனத்தால் தான் தலித், சூத்திர மக்களுக்கு வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அரசியல் சாசனத்தை எதிர்ப்பவர்களிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுத்தால் தலித் மற்றும் ஏழை மக்கள் எப்படி முன்னேற்றம் அடைவார்கள்?.

பொருளாதார பலம்

இந்திய சமூகத்திற்கு அரசியல் சாசனத்தை அம்பேத்கர் வழங்கினார். ஆனால் அரசியல் சாசனத்தின் விருப்பங்கள் இன்று வரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. ஏழை, நடுத்தர மக்களுக்கு பொருளாதார பலம் அளிக்கும் வகையில் உத்தரவாத திட்டங்களை நாங்கள் அமல்படுத்தியுள்ளோம். இந்த திட்டங்களுக்கு தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பயன்படுத்துவதாக பா.ஜனதா பயங்கர பொய்யை கூறியது. இதை நீங்கள் யாரும் நம்ப வேண்டாம். ஆவணங்களை பாா்த்து நீங்கள் பா.ஜனதாவினருக்கு பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்