ஓடும் பஸ்சில் நகை வியாபாரியிடம் ரூ.30 லட்சம் திருட்டு

ஓடும் பஸ்சில் நகை வியாபாரியிடம் ரூ.30 லட்சம் திருடிய சம்பவம் நடந்துள்ளது.

Update: 2023-06-25 18:45 GMT

சிவமொக்கா-

தாவணகெரே டவுன் பகுதியை சேர்ந்தவர் கவுரிஷ் வர்னேகர் (வயது50). இவர் அப்பகுதியில் நகை வியாபாரம் செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் கவுரிஷ் தனது மகனுடன் தாவணகெரேயில் இருந்து தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவுக்கு அரசு பஸ்சில் சென்றார். சிவமொக்கா பஸ் நிலையத்திற்கு இரவு 11 மணிக்கு பஸ் வந்தது. அப்போது பஸ் 10 நிமிடம் நிறுத்தப்பட்டிருந்தது. இதில், கவுரிஷ், தனது மகனுடன் அருகில் உள்ள கடையில் உணவு சாப்பிட சென்றார். பின்னர், அவர்கள் 2 பேரும் பஸ்சில் ஏறி இருக்கையில் அமர்ந்தனர்.

அப்போது கவுரிஷ் வைத்திருந்த கைப்பையை காணவில்லை. அதில், ரூ.30 லட்சம் இருந்துள்ளது. இதுகுறித்து அவர் கண்டக்டரிடம் கேட்டார். அதற்கு பையை நீங்கள் தான் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என கூறினார். இதையடுத்து கவுரிஷ் கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்தார். அவர்களை பயணிகள் சமாதானம் செய்து வைத்தனர்.

இதையடுத்து அவர் பஸ் முழுவதும் கைப்பையை தேடினார். ஆனால் கிடைக்கவில்லை. அந்த கைப்பையை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கவுரிஷ் தொட்டபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்