பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் - மூடநம்பிக்கையால் பறிபோன உயிர்

மோகித் என்ற கல்லூரி மாணவர் தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக கடந்த 26- ந்தேதி தனது வீட்டிற்கு வந்துள்ளார்.

Update: 2024-05-02 09:20 GMT

லக்னோ,

நிர்வாண பூஜை செய்தால் செல்வம் கிடைக்கும், நரபலி கொடுத்தால் புதையல் கிடைக்கும், தலைப்பிள்ளையை பலி கொடுத்தால் செல்வம் பெருகும் என்ற மூட நம்பிக்கையை நிஜம் என நம்பி உயிர் பலி கொடுத்திருப்பவர்கள் தொடர்பான கதையை கேட்டிருப்போம். இதே போல புற்றுநோய் குணமடைய கங்கை நீரில் 5 வயது குழந்தையை மூழ்கி சாவடித்த சம்பவம் இன்னமும் நம்மை விட்டு மறைவதற்கு முன்பு பாம்பு கடித்த விஷத்தில் இருந்து குணமடைய இளைஞர் ஒருவரை இரண்டு நாட்களாக கங்கை நதியில் கட்டி வைத்து மிதக்க வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் புலன்சாகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜஹாங்கிராபாத் பகுதியில் 20 வயது வாலிபரான மோகித் என்பவர் கல்லூரியில் பிகாம் இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். தேர்தலில் வாக்கு செலுத்துவதற்காக கடந்த 26- ந்தேதி கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். வாக்களித்ததற்கு பிறகு வயல்வெளிக்கு சென்றபோது பாம்பு கடிக்கு ஆளாகி இருக்கிறார்.

உறவினர்கள் சிலர் முதலில் அருகில் இருந்த மருத்துவரிடம் அழைத்துச் சென்று இருக்கிறார்கள். ஆனால் மருத்துவத்தால் சரி ஆகாது. கங்கை நதியில் உடம்பை வைத்திருந்தால் பாம்பு கடியின் விஷம் தானாக இறங்கி விடும் என்று சிலர் கூற மூடநம்பிக்கையால் கயிறு கட்டி இரண்டு தினங்களாக மோகித்தின் உடலை கங்கை நதியில் போட்டு வைத்துள்ளனர்.

ஆனால் இந்த மூடநம்பிக்கை எதுவும் அந்த வாலிபரை காப்பாற்றவில்லை. மாறாக பாம்பு விஷம் உடலில் ஏறி பரிதாபமாக அந்த வாலிபர் உயிரிழந்துள்ளார். உயிர் இருக்கிறதா என கூட சோதிக்காமல் கங்கை நதியிலேயே மிதக்கவிட்டுள்ளனர். 2 நாட்கள் கங்கை நீரில் மிதந்த இளைஞரின் உடலை அப்பகுதி மக்கள் மீட்டனர். இது தொடர்பாக போலீசார், சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓடும் கங்கை நீரில் உடலை வைப்பதால் விஷம் நீங்கும் என்று மூடநம்பிக்கையால், இளைஞரின் உயிர் பறிபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சி தற்போது சமூகவலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்